பாடல்கள் உரிமை தொடர்பான வழக்கு.. சென்னை நீதிமன்றத்தில் ஆஜரான இளையராஜா...!

ilayaraja

பாடல்கள் உரிமம் தொடர்பான வழக்கில் சென்னை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இசையமைப்பாளர் இளையராஜா சாட்சியம் அளித்தார்.


பாடல்கள் உரிமம் தொடர்பான வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டதால், இசையமைப்பாளரும் மாநிலங்களை நியமன எம்பியுமான இளையராஜா சென்னை நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2010ம் ஆண்டு வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில், கடந்த 1997 ஆண்டு இசையமைப்பாளர் இளையராஜாவின் மனைவி பெயரில் உள்ள இசை நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும், அந்த ஒப்பந்தத்தின்படி தேவர் மகன், பாண்டியன், பிரம்மா, குணா உள்ளிட்ட 109 திரைப்படங்களின் இசை வெளியீட்டு உரிமையை பெற்றது.

 

ilayaraja

இந்நிலையில், தங்களது அனுமதி இல்லாமல் அந்த திரைப்படங்களின் பாடல்களை தற்போது யூ-டியூப் மற்றும் சமூக வலைதளங்களில் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தது.

இந்த வழக்கில் இளையராஜாவின் இசை நிறுவனம் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி அப்துல் குத்தூஸ் விசாரித்தார். அப்போது, ஒப்பந்தம் மேற்கொண்ட போது, யூ-டியூப் மற்றும் சமூக வலைதளங்களை பற்றி குறிப்பிடவில்லை என்றும், ஆடியோ ரிலீஸ் ஒப்பந்தம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாக இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, விசாரணையை மாஸ்டர் நீதிமன்றத்திற்கு மாற்றி நீதிபதி அப்துல் குத்தூஸ் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இந்த வழக்கில் இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள இரண்டாவது மாஸ்டர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி இன்று சாட்சியம் அளித்தார்.

Share this story