'கங்குவா' இரைச்சல் சத்தம்.. ரசிகர்களுக்கு தலைவலி : ரசூல் பூக்குட்டி

kanguva

‘கங்குவா’ படத்தின் ஒலிக்கலவை விமர்சனம் குறித்து ரசூல் பூக்குட்டி ஆதங்கமாக பதிவொன்றை வெளியிட்டுள்ளார். சூர்யா நடித்து வெளியாகியுள்ள ‘கங்குவா’ படத்தை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக படம் முழுக்கவே யாரேனும் ஒருவர் கத்திக் கொண்டே இருப்பதாக குறிப்பிட்டு வருகிறார்கள். இதையே பலரும் தெரிவித்து வருவதால், இணையவாசிகள் படக்குழுவினரைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
 
தற்போது இந்த விமர்சனம் தொடர்பாக ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்ற ரசூல் பூக்குட்டி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “ஒரு ரீ-ரிக்கார்டிங் மிக்ஸர் ஆன எனது நண்பர் ஒருவர், இந்த கிளிப்பை எனக்கு அனுப்பியிருந்தார்.இது போன்ற பிரபலமான படங்களின் ஒலி குறித்த விமர்சனத்தை பார்க்க வருத்தம் மேலிடுகிறது. எங்களுடைய கலையும், கலைத்திறனும் இரைச்சல் யுத்தத்தில் சிக்கிக் கொண்டுள்ளன. யாரை குற்றம் சொல்வது? சவுண்ட் இன்ஜினியரையா? அல்லது அனைத்து பாதுகாப்பின்மையையும் திருப்திப்படுத்தும் நோக்கில் கடைசி நேரத்தில் வரும் எண்ணற்ற திருத்தங்களையா? நமது குழு இதில் தலையிட்டு, அதிகாரத்தை பயன்படுத்தி தங்கள் குரலை வலுவாக முன்வைக்க இதுவே சரியான நேரம். ஆடியன்ஸ் தலைவலியுடன் வெளியேறினால், எந்த படத்துக்கும் ரிப்பீட் வேல்யூ இருக்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.


இந்திய திரையுலகின் முன்னணி ஒலிக்கலவை வடிவமைப்பாளர் இவ்வாறு கூறியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. ‘கங்குவா’ படம் குறித்து வரும் விமர்சனங்களைப் பார்க்கும் போது, கண்டிப்பாக படக்குழுவினருக்கு மாபெரும் நஷ்டம் ஏற்படும் என வர்த்தக நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.

Share this story