உண்மை எல்லோருக்கும் வலிக்கும்.. திரைப்படங்களில் ரிலீஸ் தேதியை முடிவு செய்யும் ஓடிடி தளங்கள்- ஆர்.கெ.செல்வமணி..

தற்போதெல்லாம் திரைப்படங்களில் ரிலீஸ் தேதியை ஓடிடி தளங்களே முடிவு செய்வதாக இயக்குனர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
சத்திய சிவா இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் ‘ஃப்ரீடம்’. ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள ப்ரீடம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபிள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் இயக்குனர் ஆர்கே செல்வமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, “ முன்பெல்லாம் தயாரிப்பாளர்கள் ரிலீஸ் தேதியை தீர்மானித்தார்கள்; பிறகு நடிகர்கள் ரிலீஸ் தேதியை நிர்ணயித்தார்கள்; ஆனால் தற்போது ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர்களோ, இயக்குனர்களோ, நடிகர்களோ தீர்மானிப்பது கிடையாது. அதற்கு பதிலாக ஓடிபி தளங்கள் தான் தீர்மானிக்கின்றன. ஒரு பெரிய படம் முற்றிலும் நிறைவடைந்த பிறகு கூட அதனை அடுத்த ஆண்டு வெளியிடுமாறு ஓடிடி தளம் கூறுகிறது. இந்த நிலைமை எப்படி வருகிறது என்றால் அவர்களது கைக்கு மீறி செலவு வருகிறது.
ஆகையால் நடிகர் சசி போன்று மற்ற நடிகர்களும் , இயக்குனர்களும் திரையரங்குகள் இருக்கு அதற்கு படம் பண்ணுங்கள். திரையரங்குகள் தான் சினிமாவின் தாய். ஒரு படத்தை திரையரங்கில் வெளியிட்டால்தான் அது படமாக தெரியும். என்னதான் பெரிய வலைத்தொடர்களை வெளியிட்டாலும், திரைப்படங்களை ஓடிடி-யில் வெளியிட்டால் அதில் பெரிய தாக்கம் இருக்காது. திரையரங்குகளில் திரைப்படங்களை வெளியிட்டால்தான் டைரக்டர்களுக்கு நல்ல வேல்யூவும், நடிகர்களுக்கு நல்ல மாஸ் கிடைக்கும்.
ஒருவேளை ஜெய் பீம் , சார்பட்டா படங்களை திரையரங்குகளில் வெளியிட்டு இருந்தால் அதன் வேல்யூ மிக பிரம்மாண்டமாக இருந்திருக்கும். என்னுடைய வேண்டுகோள் என்னவென்றால் இது போன்ற பெரிய பட்ஜெட்டில் படம் செய்பவர்கள் , உங்கள் சம்பளம் , ஓடிடி, சேட்டிலைட் போன்ற லாபத்தை விட்டுவிட்டு, தமிழ் திரையரங்குகளில் என்ன வர்த்தகம் உள்ளதோ அதற்கேற்ற படங்களை எடுத்தீர்கள் என்றால் ரிலீஸ் தேதியை நீங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். அப்போது உங்கள் பின்னால் ஓடிடி தளங்களும் சேட்டிலைடும் வரும். ஆனால் இன்று எவ்வளவு பெரிய இயக்குனராக இருந்தாலும் எவ்வளவு பெரிய உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் ஓடிடி என்று திரைப்படத்தை வெளியிட சொல்கிறதோ அன்று திரைப்படத்தை வெளியிடும் ஒரு கஷ்டமான துர்பாக்கியத்தில் உள்ளார்கள்.
நான் கடந்த ஆண்டு இலங்கை முள்ளிவாய்க்கால் சென்ற போது ஒரு நிமிடம் கண்ணை மூடி அமைதியாக நின்று இருந்தேன். அப்போது என்னுடன் ஒன்றரை லட்சம் மக்கள் கூடே செல்வது போலையும், ஒரு மரண ஓலம் எனக்கு கேட்டது. 2009 சம்பவத்திற்கு பிறகு ஒரு 15 ஆண்டுகள் கழித்து தான் அங்கு சென்றேன். ஆனால் அங்கு மயான அமைதி இருந்தாலும் எனக்கு அந்த மரண ஓலம் கேட்டது. அதற்கான நியாயம் இதுவரை எந்த புத்தகங்களிலும் கிடைக்கவில்லை. இந்தியாவில் உண்மை சம்பவங்களை திரைப்படமாக எடுப்பது மிகவும் கடினம். எவ்வளவு வேண்டுமானாலும் பொய் சொல்லி ஆபாசமாக படங்களை எடுக்கலாம். ஆனால் உண்மையை சொல்லி படங்களை எடுப்பது மிகவும் கடினம். உண்மை எல்லோருக்கும் வலிக்கும்; எதிர்க்கட்சிக்கும் வலிக்கும்;ஆளுங்கட்சிக்கும் வலிக்கும்; அதிகார வர்க்கத்திற்கும் வலிக்கும்; மீடியாவிற்கும் வலிக்கும். உண்மை தங்களை சம்பந்தப்படுத்தும் போது யாரும் ஏற்றுக் கொள்வதில்லை. அதனாலேயே உண்மை கதைகளை எடுப்பதை நான் நிறுத்தி விட்டேன்.
தமிழ் சினிமாவில் இயக்குனராக இருப்பது மிகவும் கஷ்டம். மற்றவர்கள் எல்லாம் நமக்கு ஆலோசனை கூறுவார்கள். விமர்சனங்களை ஒரு மூன்று நாளுக்குப் பிறகு எழுதுங்கள். முதலில் நான் 24 மணி நேரத்துக்கு பிறகு திரைப்படத்திற்கான விமர்சனத்தை கூறுங்கள் என்று சொன்னேன். ஆனால் படத்திற்கான விமர்சனத்தை திங்கட்கிழமை என்று எழுதுங்கள்; குறைகள் இருந்தால் அதனை திருத்திக் கொள்வோம்” என்று கூறினார்.