2k கிட்ஸ்களின் வழக்கமான காதல் கதை.. ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ விமர்சனம் இதோ...

NEEK

நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் இணையத்தில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
 
  ‘பவர் பாண்டி’, ‘ராயன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள மூன்றாவது திரைப்படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’. இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், ப்ரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன் என இளம் நடிகர்கள் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

சரத் குமார், சரண்யா பொன்வண்ணன், ஆடுகளம் நரேன் போன்ற முக்கியமான மூத்த நடிகர்களும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தனுஷ் தனது வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படம் இன்று (பிப்.21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் ‘கோல்டன் ஸ்பரோ’ பாடல் இளைஞர்களிடையே சமூக ஊடகங்களில் வைரல் ஹிட்டானது. இரண்டு பாடல்களை தனுஷே எழுதியுள்ளார். மொத்த ஆல்பமுமே கவனிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இந்நிலையில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. தற்போதிருக்கும் ஜென் Z தலைமுறையினரின் காதலை, நட்பை அழகான கதையாக கூறியிருப்பதாக இணையத்தில் பரவலாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.


எக்ஸ் தளத்தின் ஒரு பதிவில் இயக்குநராக தனுஷிற்கு மூன்றாவது வெற்றி. வழக்கமான கதையை சுவாரசியமான திரைக்கதையுடன் கொடுத்திருக்கிறார்கள். கதாநாயகன் பவிஷ் நிறைய இடங்களில் ஆரம்ப கால தனுஷை நினைவூட்டுகிறார். அருமையாக நடித்துள்ளார். மேத்யூவும் நன்றாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் இசை சிறப்பாக உள்ளது. இன்றைய ஜென் Z தலைமுறைக்கான ரொமாண்டிக் காமெடி திரைப்படம் என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், எல்லோருக்கும் பழக்கமான காதல் கதையை கொஞ்சம் புதுமையாக கொடுத்துள்ளார் தனுஷ். ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை பொழுதுபோக்காக செல்கிறது. தனுஷின் இயக்கம், ஜி.வி.பிரகாஷின் இசை இவை இரண்டும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கின்றன.



மேத்யூவின் ஒன்லைன் நகைச்சுவை சிரிக்க வைக்கிறது. படத்தின் கதை மிகவும் எளிதாக கணிக்கக்கூடிய இருப்பது பலவீனமாக உள்ளது. நிறைய நகைச்சுவைகள் சிரிப்பை வரவழைக்கவில்லை என்பதும் மறொரு பலவீனம் என இன்னொரு விமர்சனத்தில் பதிவிட்டிருந்தனர்.


‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ஜென் Z தலைமுறைக்கான நல்ல காதல் நகைச்சுவை திரைப்படம் இது. முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து இதனை எடுத்துள்ளார் தனுஷ், ஜி.வி.பிரகாஷின் இசை துள்ளலாக உள்ளது. அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தின் நிறைய காட்சிகள் சிரிக்க வைக்கின்றன. முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சி கண்டிப்பாக சிரிக்க வைக்கும் என பதிவிட்டுள்ளார்.

 

 



தமிழ் சினிமாவை சேர்ந்த பல்வேறு இயக்குநர்கள், நடிகர்களும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை பார்த்துவிட்டு தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர். லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து, நடிகர் அருண் விஜய், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் தங்களது எக்ஸ் தளத்தில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை பாராட்டியுள்ளனர்.

Share this story