என் பேரை கெடுக்க முயற்சி நடக்கிறது... அல்லு அர்ஜுன் பரபரப்பு பேச்சு
நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 5ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது புஷ்பா 2 படம். இந்தப் படத்தின் முதல் பாகம் கடந்த 2021ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில், சுகுமார் இயக்கத்தில் படத்தின் இரண்டாவது பாகம் மிகவும் பிரம்மாண்டமாக அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தது. படம் வெளியாகி கடந்தசில தினங்களிலேயே சர்வதேச பாக்ஸ் ஆபீசில் 1500 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது. இந்தப் படம் ரிலீசுக்கு முன்பிலிருந்தே அடுத்தடுத்த சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. கடந்த 4ம் தேதி ரிலீசுக்கு முன்னதாக படத்தின் பிரீமியர் ஷோ ஐதராபாத்தின் சந்தியா திரையரங்கில் நடந்த நிலையில், அங்கு முன்னறிவிப்பின்றி நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்க்க வந்ததாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் வந்ததை கேள்விப்பட்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரையரங்கில் கூடியதால் தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில் கூட்ட நெரிசரில் சிக்கி ரேவதி என்ற ரசிகை உயிரிழந்தார். மேலும் அவரது 9 வயது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் முன்னதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்து அல்லு அர்ஜுன் வீடியோ வெளியிட்டிருந்தார். அவர்களது குடும்பத்தினருக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறியிருந்தார்.
ஆயினும் இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுன் உள்ளிட்டவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டிருந்தார். ஒரு இரவு சிறையில் கழித்த நிலையில் அவர் மறுநாள் காலையில் வீடு திரும்பினார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி சட்டப்பேரவையில் சம்பவம் குறித்து காட்டம் தெரிவித்துள்ளார். தாங்கள் யாருடைய பேச்சையோ கேட்டு செயல்படுவதாக தகவல் பரப்பப்படுவதாகவும் ஆனால் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் பேசியுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகர் அல்லு அர்ஜுன் செய்தியாளர்களை சந்தித்து தன்னுடைய நிலையை பேசியுள்ளார். நடந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று தெரிவித்துள்ள அல்லு அர்ஜுன், ஆனால் இதில் தன்னை குறை கூறுவது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். தான் எந்த ரோட் ஷோவையும் நடத்தவில்லை என்றும் தான் பொறுப்பில்லாதவன் கிடையாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். தன்னுடைய பெயரை கெடுப்பதற்கு சிலர் முயற்சிப்பதாக தெரிவித்துள்ள அல்லு அர்ஜுன், இந்த வழக்கு விசாரணை நடக்கும் நிலையில் தான் யாரையும் குறிப்பிட விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார். முன்னதாக தான் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க முயற்சித்ததாகவும் ஆனால் தன்னுடைய வழக்கறிஞர்கள் தன்னை தடுத்து விட்டதாகவும் அல்லு அர்ஜுன் மேலும் கூறியுள்ளார். அதனால்தான் தான் வீடியோ வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.