தமிழ் சினிமாவில் இப்படி நிறைய படங்கள் வர வேண்டும் : செல்வராகவன்
ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சொர்க்கவாசல்’. ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் செல்வராகவன், நட்டி, சானியா ஐயப்பன், பாலாஜி சக்திவேல், கருணாஸ், ஹக்கீம் ஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தணிக்கை குழுவால் ஏ சான்றிதழ் பெற்ற இப்படம் திரையரங்குகளில் இன்று வெளியான நிலையில், படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வருகிறது. மேலும்,இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் படக்குழுவைப் பாராட்டியதோடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செல்வராகவன் தற்போது சொர்க்கவாசல் படத்தைப் பாராட்டியுள்ளார். இது தொடர்பான அவரின் எக்ஸ் பதிவில், “சொர்க்கவாசல் படத்தில் இணைந்து நடித்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்! எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் மனதைக் கவரும் படமாக உள்ளது! நான் எப்போதுமே பேசிக்கொண்டிருக்கும் உண்மையான சினிமா இதுதான்! படத்தை நான் பொக்கிஷம் என்றுதான் சொல்லுவேன்! தமிழ் சினிமாவில் இதுபோன்ற நிறையப் படங்கள் வர வேண்டும்” என்று வரிக்கு வரி ஆச்சர்யகுறியுடன் படத்தைப் புகழ்ந்துள்ளார்.