ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் எவ்வித விசாரணையும் நடைபெறவில்லை.. நெல்சன் திட்டவட்டம்

Nelson

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இயக்குநர் நெல்சனிடம் விசாரணை நடத்தப்பட்டதாக செய்தி வெளியான நிலையில், எவ்வித விசாரணையும் நடைபெறவில்லை என இயக்குநர் நெல்சன் மறுப்பு தெரிவித்துள்ளார்.பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பொன்னை பாலு, ரவுடி நாகேந்திரன், காங்கிரஸ் பிரமுகர் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் போலீசார் சுமார் 200 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், திரைப்பட இயக்குநர் நெல்சன் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய மொட்டை கிருஷ்ணனிடம், நெல்சனின் மனைவி மோனிஷா தொலைபேசியில் தொடர்பு கொண்டது தொடர்பாக விசாரணை நடத்தி உள்ளனர். இந்நிலையில், இயக்குநர் நெல்சனிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.இச்செய்திக்கு நெல்சன் தனியார் தொலைக்காட்சியிடம் தொலைபேசி வாயிலாக மறுப்பு தெரிவித்துள்ளார். அதில், "போலீசார் எவ்வித விசாரணையும் என்னிடம் நடத்தவில்லை. தவறான செய்திகள் ஊடகங்களில் பரவி வருகிறது. விசாரணை நடத்தப்பட்டிருந்தால் எப்படி நான் மறுக்க முடியும்.

என்னுடைய மனைவியிடமும் நேரடியாக எந்த விசாரணையும் நடத்தவில்லை. தொலைபேசி வாயிலாக 30 வினாடிக்கு குறைவாக தான் பேசினார்கள். எதற்காக என்னை இந்த விஷயத்தில் இணைக்கிறார்கள் என்று தெரியவில்லை. காவல்துறை தரப்பில் இருந்து தான் தவறான தகவல்கள் பரவுகிறது. ஊடகங்களில் தவறான செய்திகள் வருகிறது. எனக்கு எந்த சம்மனும் வரவில்லை, என்னை விசாரிக்கவும் இல்லை" என்றார்.

Share this story