இந்த திரைப்படம் என் வாழ்க்கையையே மாற்றியது: நயன்தாரா நெகிழ்ச்சி...!
நடிகை நயன்தாரா தமிழ் திரை உலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் நிலையில், "நானும் ரவுடி தான்" படம் தனது திரையுலக வாழ்க்கையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் மாற்றியதாக கூறியுள்ளார். அவருடைய இந்த நெகிழ்ச்சியான பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்த "நானும் ரௌடிதான்" திரைப்படம் வெளியானது 9 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு, நயன்தாரா தனது இன்ஸ்டாவில் கூறியிருப்பதாவது:
"என் வாழ்க்கையை ஆசீர்வதிக்கவும், மாற்றத்தை ஏற்படுத்தவும் வந்த படம் இதுதான். 9 வருடங்களுக்கு முன் ‘நானும் ரௌடிதான்’ ரிலீஸானது. மக்களிடமிருந்து புதிய அன்பைப் பெற்றேன். எப்போதும் இதை நான் மறக்கமாட்டேன். இந்த படத்தால் ஒரு நடிகையாக புதிய பாடங்களையும் அனுபவங்களையும், புதிய நினைவுகளையும் பெற்றேன்.
மேலும், எனக்கு ஒரு புதிய உறவும் கிடைத்தது. இந்த படத்தை கொடுத்த என்னவர், விக்னேஷ் சிவனுக்கு எனது நன்றி. இந்த சிறந்த படம், என்றும் என் நினைவில் தொடர்ந்திருக்கும். நினைவுகளுடன் சேகரித்து வைத்த புகைப்படங்களை உங்களுக்காக பகிர்கிறேன்,” என்று தெரிவித்து, ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.