தனுஷுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் நாயகிகள் -யார் எந்த படம் தெரியுமா ?
தனுஷ், மம்மூட்டி நடித்துள்ள பிரமாண்டமான பான் இந்தியா படம், ‘ஓம்: சாப்டர் 1’. இதில் சாய் பல்லவி கேரக்டரின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டு, ‘கம்பீரம் அவள் அடையாளம். நீதிக்காக நிற்கும் சக்தி. நித்யா ரெட்டியாக சாய் பல்லவியை அறிமுகப்படுத்துகிறோம்’ என்று தெரிவித்துள்ளது. அந்த வீடியோவில், உயரதிகாரி ஒருவர் சாய் பல்லவியை பற்றி இவ்வாறு சொல்கிறார்; ‘அவர் ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த அதிகாரி. ஆந்திர பிரதேச காவல்துறையில் ஏஎஸ்பியாக பணியாற்றினார். இன்டர்போலுடன் இணைந்து பணியாற்றுவதற்காக, மத்திய புலனாய்வு பிரிவில் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றார்.
இளம் வயதில் நேர்மை, புத்திசாலித்தனம், அனுபவம் கொண்டவர்’ என்கிறார். தொடர்ந்து அவர், ‘நாயுடுபேட்டையை சேர்ந்த வீரமரணம் அடைந்த வனத்துறை அதிகாரியின் மகளான அவர், தற்போது செம்மர கடத்தல் பற்றி விசாரிக்கும் ஆபரேஷன் ‘ஓம்’மின் விசாரணை அதிகாரி’ என்று நித்யா ரெட்டியை அறிமுகம் செய்கிறார். வுண்டர்ஃபார் பிலிம்ஸ், ஆர் டேக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க, தனுஷ் நடித்துள்ள 55வது படம் இது. ‘ரங்கூன்’, ‘அமரன்’ ஆகிய படங்களை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கியுள்ளார்.
எழிலரசு ஒளிப்பதிவு செய்ய, சாய் அப்யங்கர் இசை அமைத்துள்ளார். தனுஷ், மம்மூட்டி ஆகியோருடன் சாய் பல்லவி, லீலா, இந்திரன்ஸ் நடித்துள்ளனர். வரும் நவம்பர் 20ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இதையடுத்து, ‘லப்பர் பந்து’ தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கும் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். அவருடன் பிரீத்தி முகுந்தன் ஜோடி சேர்ந்துள்ளார்.

