அடுத்தக் கட்டத்திற்குச் சென்ற "தக் லைஃப்" - புது வீடியோ வெளியிட்ட படக்குழு

thug life
பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் பாகத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வர சிம்பு , த்ரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். 

இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ கடந்த வருடம் கமல்ஹாசனின் பிறந்தநாளான நவம்பர் 7ஆம் தேதி வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய நிலையில், கடந்த மே மாதம் சிம்பு இணைந்திருப்பதாக அவருக்கு ஒரு அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு செர்பியா, அயர்லாந்து, ராஜஸ்தான், டெல்லி, கோவா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்தது. பின்பு படத்தின் டப்பிங் பணிகளை கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் சமீபத்தில் தொடங்கியிருந்தனர்.  

null



இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு தற்போது அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது. வீடியோவில் இப்படம் அடுத்தகட்ட பணிகளை நோக்கி நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், விரைவில் இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரைலர் அப்டேட் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல் - மணிரத்னம் இருவரும் 37 வருடங்களுக்கு பிறகு இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Share this story