வீக் எண்ட் கொண்டாட்டத்திற்கு ரெடியா? நாளை 4 படங்கள் ரிலீஸ்

ச்

கோலிவுட்டில் நாளை ஒரே நாளில் நான்கு திரைப்படங்கள் திரைக்கு வருகிறது. விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன், தினேஷ் மற்றும் கலையரசன் நடிப்பில் தண்டகாரண்யம், கவினின் கிஸ், வ. கௌதமனின் படையாண்ட மாவீரா ஆகிய படங்கள் நாளை வெளியாகிறது.

Image

கோலிவுட்டில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய படங்கள் திரைக்கு வருவது வழக்கம், அந்த வகையில் நாளை ஒரே நாளில் நான்கு திரைப்படங்கள் திரைக்கு வருகிறது. நான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சக்தித் திருமகன் திரைப்படத்தின் மூலம் தனது 25வது படத்தில் நடித்து முடித்துள்ளார்.  அருவி, வாழ் படங்களை இயக்கி கவனம் ஈர்த்த அருண் பிரபு, விஜய் ஆண்டனியின் 25வது படத்தை இயக்கியுள்ளார். இதில் வாகை சந்திரசேகர், வேல்முருகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார். அரசியல் கதை களத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தயாராகியுள்ள இப்படம் நாளை திரைக்கு வருகிறது.

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை தொடர்ந்து அதியன் ஆதிரை இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தண்டகாரண்யம். இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தை தயாரித்த இயக்குனர் பா . ரஞ்சித்தே இதையும் தயாரித்துள்ளார். இப்படத்தில் அட்டகத்தி தினேஷ், கலையரசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரித்விகா, வின்சு சாம், ஷபீர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படமும் நாளை திரைக்கு வர உள்ளது.

Image

தேசிய விருது பெற்ற நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணனின் அறிமுக இயக்கத்தில், நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் கிஸ். இதில் கவினுக்கு ஜோடியாக அயோத்தி படத்தில் நடித்த பிரபலமான பிரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். இதற்கு டாடா படத்தின் மூலம் கவனம் பெற்ற ஜென் மார்டின் இசையமைக்கிறார். டாடா படத்தைத் தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் மற்றும் பிளடி பெக்கர் படங்கள் பெரிய வரவேற்பு பெறாத நிலையில் கிஸ் படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இல்லாத சூழல் உள்ளது. எனவே நடிகர் கவினுக்கு கிஸ் படம் வெற்றியை கொடுக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தற்கால இளைஞர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் நாளை திரைக்கு வருகிறது. கதைக்கு கிஸ் என்ற தலைப்பு பொருத்தமாக இருந்ததாகவும், அது இயக்குநர் மிஸ்கினிடம் கேட்டபோது உடனே கொடுத்து விட்டார் என படக் குழுவினர் சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசியது குறிப்பிடத்தக்கது.

Image

கனவே கலையாதே, மகிழ்ச்சி படங்களை இயக்கிய வ. கௌதமன் இயக்கி நடித்துள்ள படையாண்ட மாவீரா படமும் நாளை வெளியாகிறது.  இப்படத்தில் சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, மொட்டை ராஜேந்திரன், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காடுவெட்டி குருவின் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this story