ஜப்பானில் வெளியாகும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’...!

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் ஜப்பானில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியான படம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'(Tourist Family).மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் தயாரித்திருந்த இப்படத்தில் யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்த இப்படம் இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து பேசியிருந்தது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், ரஜினி, சிவகார்த்திகேயன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் இப்படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து எழும் பாராட்டால், படத்திற்கு கூடுதல் காட்சிகளும் கூடுதல் திரைகளும் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து படத்தின் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் இப்படம் ஜப்பானில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 25ஆம் தேதி முதல் அங்கு வெளியாகவுள்ளதாகவும் அதற்கான டிக்கெட் முன்பதிவு இந்த வார இறுதியில் இருந்து தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.