திரைத்துறையில் 22 ஆண்டுகளை நிறைவு செய்த திரிஷா… ‘சூர்யா 45’ படக்குழுவுடன் கொண்டாட்டம்!

Trisha

நடிகை திரிஷா தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். அந்த வகையில் இவர் தற்போது தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, சூர்யா 45 ஆகிய படங்களில் நடித்து வரும் திரிஷா மலையாளத்தில் ஐடென்டி எனும் திரைப்படத்தையும் தெலுங்கில் விஷ்வம்பரா எனும் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை திரிஷா நேற்றுடன் (டிசம்பர் 13) திரைத்துறையில் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இது தொடர்பாக நடிகை திரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில், “சினிமாவில் 22 ஆண்டுகளாக அங்கம் வகிப்பதற்காக பெருமைப்படுகிறேன்” என்று பதிவு ஒன்றினை வெளியிட்டு இருந்தார். அதேசமயம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நடிகை திரிஷா நடித்து வரும் சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் திரிஷாவின் 22 ஆண்டுகால சினிமா பயணத்தை படக்குழுவினருடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.



நடிகை திரிஷா கடந்த 2002 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் தேதி அமீர் இயக்கத்தில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார் திரிஷா. அதைத்தொடர்ந்து ஆறு திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் மன்மதன் அன்பு திரைப்படத்தில் சூர்யாவுடன் பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருப்பார் திரிஷா. இந்நிலையில் சூர்யா 45 மீண்டும் இந்த கூட்டணி இணைந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story