நடிகை சோனா வீட்டில் நுழைந்த இருவர் கைது
குசேலன், கோ, ஜித்தன் 2 என பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோனா. கடைசியாக இந்தாண்டு மார்ச்சில் வெளியான பூமர் அங்கிள் படத்தில் நடித்திருந்தார். இவர் மதுரவாயல் கிருஷ்ணா நகரில் வசித்து வரும் நிலையில், கொள்ளையர்களால் கத்தி முனையில் மிரட்டப்பட்டுள்ளார்.
இவரது வீட்டில் கடந்த 3ஆம் தேதி சுற்று சுவர் ஏறி திருடர்கள் வீட்டின் உள்ளே சென்றுள்ளனர். பின்பு வீட்டின் வெளிப்புறம் பொருத்தப்பட்டுள்ள ஏசி யூனிட்டை திருட முயன்றுள்ளனர். அவர்களின் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த நாய் திருடர்களை பார்த்து குறைத்துள்ளது. நாய் சத்தம் கேட்டு வெளியே வந்த சோனா, கொள்ளையர்களை பார்த்து கூச்சலிட முயன்றுள்ளார். ஆனால் அவர்கள் சோனாவை கூச்சலிட விடாமல் கத்தி முனையில் அவரை மிரட்டி பின்னர் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி உள்ளனர்.
பின்பு காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு சோனா தகவல் தெரிவித்தார் . அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார், சோனா வீட்டின் அருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவை அடிப்படையாகக் கொண்டு திருட வந்த கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் சிசிடிவி காட்சியின் அடிப்படையில் திருட முயன்ற கொள்ளையர்கள் மதுரவாயலை சேர்ந்த சிவா மற்றும் லோகேஷ் எனத் தெரிய வந்துள்ளது. அவர்கள் இருவரையும் மதுரவாயல் குற்றப்பிரிவு போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இருவரிடமும் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.