”இரண்டு மாத உழைப்பு வீண்”.. - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வேதனை...!

lokesh kanagaraj

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் கூலி. சன்பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

இதையடுத்து இப்படத்திலிருந்து தொடர்ந்து கதாபாத்திர அறிமுக போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது. அதன்படி மலையாள நடிகர் சௌபின் சாஹிர், தயாள் என்ற கதாபாத்திரத்திலும் தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜுனா, சைமன் என்ற கதாபாத்திரத்திலும் கன்னட நடிகர் உபேந்திரா கலீஷா என்ற கதாபாத்திரத்திலும் சத்யராஜ் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்திலும் ஸ்ருதிஹாசன் பிரீத்தி என்ற கதாபாத்திரத்திலும் நடித்து வருவதாக அறிவித்திருந்தனர். 


இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நாகர்ஜுனா நடிக்கும் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் கசிந்தது. மேலும் அந்த வீடியோ வைரலானது. இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ், படப்பிடிப்பு தளத்தில் இருந்து கசிந்த வீடியோ குறித்து மனவேதனை அடைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ரெக்கார்ட் செய்த ஒரு படப்பிடிப்பு வீடியோவால் பலரின் இரண்டு மாத உழைப்பு வீண் போனது. ஒட்டுமொத்த அனுபவத்தையும் கெடுக்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this story