‘மாமன்னன்’ வெளியாவதில் சிக்கலா ?.. உதயநிதியின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதால் பரபரப்பு !

maamanan

உதயநிதியின் ‘மாமன்னன்’ படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.  

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. வரும் ஜூன் 29-ஆம் இப்படம் திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தை வெளியிட இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தை வெளியிட தடை விதிக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓஎஸ்டி பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராம சரவணன் என்பவர் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

maamanan

அதில், தனது நிறுவனம் சார்பில் உதயநிதி நடிப்பில் ‘ஏஞ்சல்’ என்ற படத்தை கடந்த 2018-ஆம் தொடங்கினோம். கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் கயல் ஆனந்தி, பாயல் ராஜ்புத், யோகிபாபு உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்தனர். 80 சதவீத படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் 20 சதவீத படப்பிடிப்பு மீதமுள்ளது. ஆனால் அதற்குள் ‘மாமன்னன்’  படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதேநேரம் ‘மாமன்னன்’ திரைப்படம் தான் கடைசிப்படம் என்று அறிவித்துவிட்டார். ‘ஏஞ்சல்’ படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவு செய்துள்ளேன். ‘ஏஞ்சல்’ படத்தை முடிக்காமல் ‘மாமன்னன்’ படத்தை வெளியிட்டால் தமக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும். அதனால் ஏஞ்சல் படத்திற்கான போடப்பட்ட ஒப்பந்தின்படி இன்னும் 8 நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருகிறார். அதனால் உடனடியாக ‘ஏஞ்சல்’ படப்பிடிப்பை முடித்து தரவேண்டும் அல்லது 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும். அதுவரை மாமன்னன் படத்திற்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும் என்று அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. 

 

Share this story