உன்னி முகுந்தன் நடித்த ‘மார்கோ’ ஓடிடி ரிலீஸ் அப்டேட்..!

‘மார்கோ’ திரைப்படம் பிப்ரவரி 14-ம் தேதி சோனி லிவ் ஓடிடியில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாளத்தில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த ‘மார்கோ’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஹனீஃப் அதேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியான மலையாள படம் ‘மார்கோ’. இந்தப் படத்தில் சித்திக், ஜெகதீஷ், அபிமன்யூ திலகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ரவி பஸ்ரூர் படத்துக்கு இசையமைத்துள்ளார். க்யூப்ஸ் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. அதீத வன்முறை, ஆக்ஷனில் உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் மொத்தமாக ரூ.104 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியதாக கூறப்படுகிறது. உன்னி முகுந்தனுக்கு இது முக்கியமான படமாக அமைந்தது. இந்நிலையில் இந்தப் படம் வரும் பிப்ரவரி 14-ம் தேதி சோனி லிவ் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தை மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.