மாரிசெல்வராஜூக்கு ஆதரவுக்கரம் நீட்டும் வடிவேலு

தனது தனித்துவமான திரைப்படங்களால் மக்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குநர் மாரிசெல்வராஜ். திருநெல்வேலி, புளியங்குளத்தை பூர்வீகமாக கொண்ட இவர் அங்கு பெய்து வரும் வரலாறு காணாத மழையால், நிறைய கிராமங்களை தொடர்புகொள்ள முடியவில்லை, உதவி செய்யுங்கள் என கைகூப்பி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்” வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்.” என பதிவிட்டிருந்தார்.
அதுமட்டுமன்றி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் களத்தில் இறங்கி மீட்பு பணிகளிலும் அவர் ஈடுபட்டார். மாரி செல்வராஜின் இந்த செயலை பல்வேறு தரப்பினர் பாராட்டிய அதே சமயத்தில், பலரும் அமைச்சருடன் மாரி செல்வராஜுக்கு என்ன வேலை என விமர்சித்தனர். தற்போது மாரி செல்வராஜூக்கு ஆதரவாக வடிவேலு குரல் கொடுத்துள்ளார். அது அவருடைய ஊரு. அவர் என்ன அமெரிக்கக்காரனா? இப்படி தப்பு தப்பா பேசறாங்க என தெரிவித்துள்ளார்.