நான் நடிப்பதை வடிவேலு தடுத்தார்- ஐகோர்ட்டில் சிங்கமுத்து விளக்கம்

singamuthu

வடிவேலும் சிங்கமுத்துவும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக ஒரு கட்டத்திலிருந்து இணைந்து நடிக்காமல் இருந்தனர். மேலும் வடிவேலு தாம்பரத்தில் பிரச்சினைக்குரிய நிலத்தை தனக்கு வாங்கிக் கொடுத்ததாக சிங்கமுத்துவுக்கு எதிராக எழும்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. 

இதனிடையே சிங்கமுத்துவுக்கு எதிராக மற்றொரு மனு தாக்கல் செய்தார் வடிவேலு. சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், “கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் சிங்கமுத்து, யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் என்னைப் பற்றி தரக்குறைவாகப் பேசியுள்ளார். இது பொதுமக்கள் மற்றும் எனது ரசிகர்கள் மத்தியில் எனக்கு இருக்கும் நற்பெயரை களங்கப்படுத்தும் செயல்.

எனவே சிங்கமுத்து ரூ. 5 கோடியை எனக்கு நஷ்டஈடாக வழங்க உத்தரவிட வேண்டும். அத்துடன் என்னைப்பற்றி அவதூறு பரப்ப சிங்கமுத்துவுக்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சிங்கமுத்து இரண்டு வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும், என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிங்கமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், “வடிவேலுவின் வெற்றிக்கு பின்னால் நான் தான் இருந்தேன். மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் கருத்து தெரிவிக்கவில்லை. தன்னை துன்புறுத்தும் நோக்கில் இந்த வழக்கை வடிவேலு தாக்கல் செய்துள்ளார். தான் நடிப்பதை தடுக்கும் வகையில் தயாரிப்பாளர்களிடம் தன்னை பற்றி தவறாக அவர் சித்தரித்தார். அவரை பற்றி, நான் பேட்டியளிக்க தடை கேட்பதற்கு எந்த உரிமையும் அவருக்கு இல்லை. அதனால் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்

Share this story