தொல்பொருள் ஆராய்ச்சியாளராக மகேஷ் பாபு,-வாரணாசி படத்தின் அப்டேட்
வாரணாசி படத்தின் கதை குறித்து பல்வேறு கருத்துகள் பரவி வரும் நிலையில் உண்மையான கதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, உலகளாவிய அளவில் நடைபெறும் ஒரு அதிநவீன ஹைடெக் கதைக்களம் ‘வாரணாசி’. 2027ம் ஆண்டில், சாம்பவி என்ற பிரமாண்ட விண்கல் ஒன்று புனித நகரமான வாரணாசி மீது நேரடியாக மோதும் அபாயம் ஏற்படுகிறது. அதனால் உலகிற்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் உருவாகிறது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளரும் சாகச பயணியுமான மகேஷ் பாபு, பழமையான ஒரு விண்வெளியை சேர்ந்த அரிய பொருளை கண்டுபிடிக்க உலகம் முழுவதும் பயணிக்கும் ஆபத்தான ஒரு பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார். அவருடன் துணிச்சலான வரலாற்று ஆய்வாளரும், சிறந்த துப்பாக்கி சுடும் வீரருமான பிரியங்கா சோப்ராவும் இணைகிறார். இவர்களை தொழில்நுட்பத்தில் வல்லமை படைத்த வில்லனான பிரித்விராஜ் சுகுமாரன் துரத்துகிறார்.
இந்த பேரழிவை தடுப்பதற்கான சாவி, வாரணாசியின் புராண வரலாற்றிற்குள் மறைந்துள்ளது. இவர்களது தேடல் ஆப்பிரிக்காவின் காடுகள், அண்டார்டிகாவின் பனிப்பிரதேசங்கள், ஐரோப்பாவின் பல்வேறு நிலப்பரப்புகள் வழியே கடந்து செல்லும் ஒரு அதிநவீன அறிவியல் திரில்லர், புனைக்கதையாக உருவாகிறது.

