‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதிக்காக காத்திருக்கும் ‘வீர தீர சூரன்’

‘விடாமுயற்சி’ படத்தின் வெளியீட்டு தேதிக்காக ‘வீர தீர சூரன்’ படக்குழு காத்திருக்கிறது. ஜனவரி 10-ம் தேதி வெளியாக இருந்த படம் ‘விடாமுயற்சி’. ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தை இழுபறியால் இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. ஆனால், இப்போது வரை அந்தப் பேச்சுவார்த்தை முடிவு பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, இந்தப் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது எனவும், ஜனவரி 23-ம் தேதி படம் வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
இதனை உறுதி செய்யும் விதமாக, கார் பந்தயப் போட்டிக்கு இடையே அஜித் அளித்த பேட்டியில் “ஜனவரி ஒரு படம் வெளியாகும்” என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் ‘விடாமுயற்சி’ எப்போது வெளியாகும் என்ற குழப்பம் மீண்டும் எழத் தொடங்கியிருக்கிறது. இது தெரியாத காரணத்தினால் ’வீர தீர சூரன்’ படக்குழுவும் காத்திருக்கிறது.
‘விடாமுயற்சி’ படத்தின் வெளியீடு தாமதமானால், ஜனவரி 31 அல்லது பிப்ரவரி 7-ம் தேதி ‘வீர தீர சூரன்’ படத்தை வெளியிடலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள். ஜனவரி 23-ம் தேதி ‘விடாமுயற்சி’ வெளியானால், மார்ச் மாதத்தில் ‘வீர தீர சூரன்’ வெளியிடலாம் எனவும் திட்டமிட்டு இருக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் ‘விடாமுயற்சி’ படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டவுடன் முடிவு செய்துகொள்ளலாம் என காத்திருக்கிறார்கள்.
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வீர தீர சூரன்’. ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்துள்ளனர். அருண்குமார் இயக்கியுள்ள இப்படத்துக்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்தனர்.