வேள்பாரி சர்ச்சை: ஷங்கரின் எச்சரிக்கையும் ‘தேவரா’ படம் மீதான விமர்சனமும்!
திரைப்படங்கள் அல்லது வெப் தொடர்களில் ‘வேள்பாரி’ நாவலில் வரும் காட்சிகளை பயன்படுத்தினால் சட்டரீதியான நடவடிக்கை பாயும் என்று இயக்குநர் ஷங்கர் எச்சரித்துள்ளார்.
பிரபல எழுத்தாளரும் மதுரை எம்.பி.யுமான சு.வெங்கடேசன் எழுதிய நாவல் ‘வீரயுக நாயகன் வேள்பாரி’. தமிழில் வெளியான மிகவும் புகழ்பெற்ற நாவல்களில் ஒன்றான இது வாசகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. இந்த நாவலின் உரிமையை பெற்று இதனை திரைப்படமாக்கும் முயற்சிகளை இயக்குநர் ஷங்கர் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இயக்குநர் ஷங்கர், “அனைவரது கவனத்துக்கும்... சு.வெங்கடேசனின் புகழ்பெற்ற தமிழ் நாவலான ‘வீர யுக நாயகன் வேள்பாரி’யின் காப்புரிமையை வைத்திருப்பவன் என்ற முறையில், நாவலின் முக்கிய காட்சிகள் உருவப்பட்டு அனுமதி இல்லாமல் பல படங்களில் பயன்படுத்தப்படுவது வருத்தமளிக்கிறது. சமீபத்தில் வெளியான ட்ரெய்லர் ஒன்றில் நாவலின் ஒரு முக்கிய காட்சி வருவதை கண்டு வேதனை அடைந்தேன். திரைப்படங்கள், வெப்தொடர்கள் என எந்த ஒரு வடிவத்திலும் நாவலில் இருந்து காட்சிகளை பயன்படுத்தாதீர்கள். படைப்பாளியின் உரிமைக்கு மதிப்பளியுங்கள். அல்லது சட்டரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்ளுங்கள்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஷங்கர் இந்த பதிவையடுத்து, பலரும் அண்மையில் வெளியான ‘தேவரா’ படத்தின் ட்ரெய்லரைத்தான் ஷங்கர் குறிப்பிடுகிறார் என்று கூறத்தொடங்கினார். அதில் வரும் பல காட்சிகள் ‘வேள்பாரி’யில் வரும் காட்சிகளை நினைவுப்படுத்துவதாக நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். இன்னும் சிலரோ சில வாரங்களுக்கு முன்பு வெளியான ‘கங்குவா’ ட்ரெய்லரிலும் ‘வேள்பாரி’ நாவலில் வருபவற்றை போன்ற காட்சிகள் இடம்பெற்றதாக கூறிவருகின்றனர்.