"கோட் படத்துக்குப் போறீங்களா.. CSK vs MI மேட்ச் பாத்துட்டு போங்க".. ஹின்ட் கொடுத்த வெங்கட் பிரபு
தமிழகம் முழுவதும் விஜயின் கோட் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், 2023ஆம் ஆண்டு சேப்பாக்கில் நடைபெற்ற "CSK vs MI" ஐபிஎல் போட்டியை இன்னொருமுறை மறுபார்வை பார்த்துவிட்டு "GOAT" அழைத்துச் செல்லும் உலகுக்கு வாருங்கள் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜயின் 68வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. செப்டம்பர் 5ஆம் தேதியான இன்று கோட் திரைப்படம் வெளியான நிலையில் விஜய் ரசிகர் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என உற்சாகத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் முதல் காட்சி காலை 9 மணி தான் என்ற நிலையில், இந்தியாவில் உள்ள ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்கள் மற்றும் அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் கோட் திரைப்படத்தை அதிகாலையிலையே கண்டு ஆரவாரமாகக் கொண்டாடி வருகின்றனர்.
இதற்கிடையே, இயக்குநர் வெங்கட் பிரபு கோட் திரைப்படம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "இதுவரை பட வெளியீட்டுக்கு முன் நான் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதில்லை. திரைத்துறைக்கு வந்த நாள் முதல் என் அருமை நண்பர், அண்ணன் தளபதி" ரசிகனாகவே இருந்திருக்கிறேன். இன்றைக்கு அவரது படத்தை இயக்கியிருக்கிறேன். இன்னமும் இது ஒரு கனவைப் போலிருக்கிறது.
இதனை வெற்றிகரமாக நிறைவேற்ற எனக்குத் துணை நின்ற நல்லுள்ளங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கோட் (GOAT) பட வேலைகளைத் தொடங்கிப் 12 மாதங்கள் ஆகின்றன. ரத்தமும், வியர்வையும் சிந்தி (உண்மையாகவும் கூட) ரசிகர்களான உங்களை மகிழ்விக்கவும், ஒரு மனிதரை, நம் நாட்டின் பெருமிதத்தை, "தளபதி" விஜயைக் கொண்டாடவும் உழைத்திருக்கிறோம்.
வாய்ப்புக்கு நன்றி சார், இந்த திரைப்படம் உங்கள் ரசிகனிடமிருந்து உங்களுக்கான பரிசாக வருகிறது. இதை நான் என்றென்றும் மகிழ்வுடன் நினைவில் சேமித்திருப்பேன். அன்பான ரசிகர்களுக்கு, இன்னும் சில மணி நேரங்களில் கோட் திரைப்படம் முழுக்க உங்கள் சொந்தமாகிவிடும்.
அது உங்களை மகிழ்வித்து, மறக்கமுடியாத மகத்தான திரையரங்க அனுபவத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறேன். ஆனால், 2023ஆம் ஆண்டு சேப்பாக்கில் நடைபெற்ற "CSK vs MI" IPL போட்டியை இன்னொருமுறை மறுபார்வை பார்த்துவிட்டு "GOAT" அழைத்துச் செல்லும் உலகுக்கு வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
தற்போது, வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள இந்த அறிக்கையால், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஐபிஎல் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் ஆர்வத்தையும், உற்சாகத்தையும் கிளப்பியுள்ளது.