தி கோட் ; அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இப்படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
‘தி கோட்’ படத்தின் முதல் பாடல் ‘விசில் போடு...’ கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது. அதில் விஜய்யுடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் பாடியிருந்தனர். அதனைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாவது பாடல் ‘சின்ன சின்ன கண்கள்...’,விஜய்யின் பிறந்தநாளான கடந்த ஜூன் 22ஆம் தேதி வெளியாகியிருந்தது. அதிலும் விஜய் பாடியிருக்க, அவருடன் இணைந்து மறைந்த பாடகி பவதாரணி பாடியிருந்தார். இவரது குரல் ஏ.ஐ தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தப்பட்டது. மேலும் விஜய்க்கு பிறந்தநாள் தெரிவிக்கும் விதமாக ‘தி கோட் பர்த்டே ஷாட்ஸ்’ என்ற தலைப்பில் ஒரு சிறிய வீடியோவை வெளியிட்டிருந்தனர். அதில் சின்னதாக ராப் பாடல் இடம்பெற்றிருந்தது. அப்பாடல் ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
இந்த நிலையில், வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யுவன் ஸ்டூடியோவில் பணியாற்றி வரும் புகைப்படத்தை வெளியிட்டுட்டுள்ளார். அதில், “இசையமைப்பாளர் படத்திற்கான பணியைத் தொடங்கி விட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.