செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘ரெட் சாண்டல்’... நடிகர் வெற்றியின் பட டிரெய்லர் வெளியீடு !

செம்மரக் கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘ரெட் சாண்டல்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான வெற்றி, அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தில் வெற்றி நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள ‘மெமரீஸ்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படத்திற்கு பிறகு வெற்றி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெட் சாண்டல்’. இந்த படத்தை ‘கழுகு’ படத்தில் அசோசியேட்டாக பணியாற்றிய குரு ராமானுஜம் இயக்கியுள்ளார். இந்த படத்தில் வெற்றிக்கு ஜோடியாக தியா மயூரிகா நடித்துள்ளார். இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்’ படத்தில் நடித்த கன்னட நடிகர் ராமச்சந்திர ராஜு வில்லனாகவும், மாரிமுத்து முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
ஜெ.எம். சினிமாஸ் சார்பில் பார்த்தசாரதி தயாரித்துள்ள இப்படம் கமர்ஷியல், சென்டிமென்ட் கலந்த திரில்லர் படமாக உருவாகியுள்ளார். அதாவது தமிழகத்திலிருந்து செம்மரம் வெட்ட செல்லும் கூலி தொழிலாளிகளின் கதையாகும். உண்மையில் நடைபெற்ற சம்பவத்தின் பின்னணியில் இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.