'விடுதலை 2' : வெற்றிமாறனுக்கு மாலை அணிவித்து பாராட்டு!
![v2](https://ttncinema.com/static/c1e/client/88252/uploaded/616f84f630192f513fedd1c4df9fd86f.png)
விடுதலை 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, படக்குழுவினர் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோர் வெற்றி விழா கொண்டாடினர். ’விடுதலை 2’ படத்தின் வெற்றியை படக்குழு கொண்டாடியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்த ’விடுதலை 2’ திரைப்படம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெளியானது. விடுதலை முதல் பாகம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கனிமவளத்தை திருடும் அரசுக்கு எதிராக விஜய் சேதுபதி இயக்கம் அமைத்து போராடுகிறார். கிட்டதட்ட மக்களை காக்கும் மாவீரன் போல வாழும் விஜய் சேதுபதி அரசிடம் பிடிபட்டாரா, மற்றும் அவரின் சொந்த வாழ்க்கையை மையமாக வைத்து ’விடுதலை 2’ திரைப்படம் உருவாகியுள்ளது. விடுதலை முதல் பாகத்தின் தொடர்ச்சியாக பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே விடுதலை 2 வெளியானது.
இதனைத்தொடர்ந்து விடுதலை 2 கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வணிக ரீதியாக சுமாரான வசூலை பெற்றது. வெற்றிமாறன் இயக்கிய படங்களில் விடுதலை 2 சற்று சொதப்பியுள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். பிரபல சினிமா வர்த்தக இனையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்திய அளவில் விடுதலை 2 திரைப்படம் 35.80 கோடி வசூல் செய்துள்ளது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெற்றிமாறன் உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டி வெற்றி விழா கொண்டாடியுள்ளது. இந்த நிகழ்வில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, சேத்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ’விடுதலை 2’ திரைப்படம் வரும் ஜனவரி மாத இறுதியில் ஜீ5 ஓடிடியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இயக்குநர் வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யா நடிக்கும் ’வாடிவாசல்’ படத்தை இயக்குகிறார்.