'விடுதலை' படத்தை பார்த்த ரஜினி... வெற்றிமாறனை நேரில் அழைத்து பாராட்டு !

'விடுதலை' படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். எதார்த்த வாழ்வியலை படமாக்கி வரும் அவரது படைப்புகள் ரசிகர்களிலேயே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'விடுதலை'. பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய நாவலை வைத்து இந்த படம் உருவாகி உள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் கதாநாயகியாக ஜிவி பிரகாஷின் தங்கை பாவனி ஸ்ரீ நடித்துள்ளார். பிரகாஷ் ராஜ், கெளதம் மேனன், சேத்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை எடுத்துள்ளனர். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமூக வலைதளங்களில் பாசிட்டிவ் விமர்சனங்களை இப்படம் பெற்று வருகிறது. கடந்த சில நாட்களிலேயே இந்த படம் வசூல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சூரி மற்றும் படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பிற்கான புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், விடுதலை திரைப்படம் இதுவரை தமிழ்த் திரையுலகம் பார்த்திராத கதைக்களம். இது ஒரு திரைக்காவியம். நடிகரின் சூரியின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. இசையில் என்றும் ராஜா இளையாராஜா. தமிழ் திரையுலகின் பெருமை இயக்குனர் வெற்றிமாறன். தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) April 8, 2023