விக்னேஷ் சிவன் சர்ச்சையில் புதுச்சேரி அமைச்சர் விளக்கம்!

vignesh


இயக்குநர் விக்னேஷ் சிவன் புதுச்சேரி அரசு இடத்தை விலைக்கு வாங்குவது குறித்து எழுந்த சர்ச்சையில் புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் விளக்கம் அளித்துள்ளார். இயக்குநர் விக்னேஷ் சிவன் புதுச்சேரியில் அரசு கீழ் இயங்கி வரும் ஹோட்டலை விலைக்கு வாங்கவுள்ளதாக பரவிய தகவல் குறித்து புதுச்சேரி அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். பிரபல தமிழ் சினிமா இயக்குநரும், நடிகை நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவன், புதுச்சேரி அரசின் கீழ் இயங்கி வரும் சீகல்ஸ் ஓட்டலை கடந்த சில நாட்களுக்கு முன்பு விலைக்குப் பேசியதாக தகவல் வெளியாகி இணையத்தில் பேசும் பொருளானது.

இதனையடுத்து புதுச்சேரி ஹோட்டல் விவகாரம் குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரது பதிவில், “பாண்டிச்சேரியில் நான் அரசு சொத்தை கையகப்படுத்த முயற்சிப்பதாக பரவி வரும் தவறான செய்தியை தெளிவுபடுத்துவதற்காக இந்த பதிவை பதிவிடுகிறேன். என்னுடைய 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படப்பிடிப்பு அனுமதிக்காக பாண்டிச்சேரி விமான நிலையத்திற்கு சென்றிருந்தேன். அப்போது மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்க வேண்டியிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக அங்கு வந்த உள்ளூர் மேலாளர் எனது சந்திப்பிற்குப் பிறகு அவரிடம் ஏதோ ஒன்றைப் பற்றி விசாரித்தார். அது தவறுதலாக என்னுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து உருவாக்கப்பட்ட மீம்ஸ் மிகவும் வேடிக்கையாக இருந்தது. ஆனால் தேவையற்றது” என கூறியிருந்தார். தற்போது விக்னேஷ் சிவன் சர்ச்சைக்கு விளக்கமளித்து புதுச்சேரி அமைச்சர் லட்சுமி நாராயணன் பேசியுள்ளார்.

அவர் பேசுகையில் "கடந்த வாரம் இயக்குனர் விக்னேஷ் சிவன் என்னை சந்தித்து புதுச்சேரியில் சில இடங்களில் படப்பிடிப்பு நடத்துவது குறித்தும், கலை நிகழ்ச்சிகள் நடத்த இடங்கள் குறித்தும் விசாரித்தார். அப்போது அவருடன் வந்த உள்ளூர் சினிமாத்துறை நபர் ஒருவர், புதுச்சேரி சுற்றுலா துறைக்கு சொந்தமான சீகல்ஸ் ஓட்டலை விற்க போகிறீர்களா? அப்படி விற்றால் என்ன விலை போகும்? என்ற மாதிரியான கேள்விகளை என்னிடம் கேட்டார். பின்னர் அவரிடம் அரசாங்கத்தின் இடத்தை யாருக்கும் விற்க அனுமதி இல்லை, இவ்வாறு அரசாங்கத்தின் சொத்தை விலைக்கு கேட்பது கண்டிக்கத்தக்கது என எச்சரிக்கை விடுத்தேன்.

விக்னேஷ் சிவன் புதுச்சேரியில் மிகப்பெரிய இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார். அதுகுறித்து என்னிடம் கேட்ட போது, புதுச்சேரியில் பிரமாண்டமான இடத்தை தேர்வு செய்யுங்கள், பின்னர் அரசு நிர்ணயிக்கும் தொகையை வரியுடன் செலுத்தி, நிபந்தனையுடன் நடத்தலாம் என்று கூறினேன். ஆனால் விக்னேஷ் சிவன் அரசு இடத்தை விலைக்கு வாங்குவது தொடர்பாக எதுவும் பேசவில்லை” என்று கூறியுள்ளார்.

Share this story