"என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை"- ‘எல்ஐகே’ படம் பற்றி விக்னேஷ் சிவன்

vignesh shivan

நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கி திரைக்கு வந்த ‘எல்ஐகே’ என்கிற ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படம், எதிர்பார்த்த வெற்றியையும், வசூலையும் பெறவில்லை. இதனால் பெரிதும் அப்செட்டான விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், ‘இதுபோல் ஒரு படத்தை உருவாக்குவது மிகவும் கடினமாக இருந்தது. திரைக்கு கொண்டு வருவது, அதைவிட கடினமாக இருந்தது. இணையதளங்களில் பல்வேறு கடுமையான எதிர்மறை விமர்சனங்கள் வெளியானதால், தியேட்டர்களில் படத்தை பார்க்க தவறிவிட்டதாக பலர் எனக்கு மெசேஜ் அனுப்பினர். சில படங்கள் எதிர்மறை விமர்சனங்களை தாங்கி நிற்கின்றன.

மற்றவை அவ்வாறு செய்வது இல்லை. தங்களின் சூழல், சக திரைத்துறை அல்லது செல்வாக்கு கொண்டவர்களின் ஆதரவு இல்லாத படங்களுக்கு பொதுமக்களின் பார்வை அவற்றின் தலைவிதியை முற்றிலும் மாற்றிவிடும். தங்கள் அறிவுத்திறனையும், மேன்மையையும் வெளிப்படுத்தும் நோக்கத்தில் எழுதப்படும் அல்லது பேசப்படும் விமர்சனங்கள், ஒரு படத்தை விமர்சிப்பதையும் தாண்டி, ரசிகர்கள் அப்படத்தை பார்க்க ஒரு வாய்ப்பு அளிப்பதில் இருந்து ஊக்கத்தை இழக்க செய்துவிடுகிறது. லட்சியம் கொண்ட இயக்குனர்களின் கனவுகளை நசுக்கிவிடுகின்றன.

‘எல்ஐகே’ படத்துக்கு கிடைத்த வசூல் முடிவை இன்னும் கூட என்னால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முதலில் வெளியானபோது ஏற்றுக்கொள்ளப்படாத பல சிறந்த படங்கள் திரையுலகில் இருக்கின்றன என்ற ஒரு எண்ணமே எனக்கு ஒருவிதமான ஆறுதலை தருகிறது’ என்று புலம்பியுள்ளார்.

Share this story