விஜய் 66 -ல் இணைகிறாரா பிரகாஷ் ராஜ்.. மீண்டும் கில்லி கூட்டணியா ?
விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் ‘பீஸ்ட்’ திரைப்படம் உருவாகி வருகிறது. ஆக்ஷன் அதிரடியில் உருவாகி வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். அனிரூத் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் பணிகள் இன்னும் முழுமையாக முடியாத நிலையில் விஜய்யின் 66வது படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து வரும் விஜய், அடுத்து குடும்ப சென்டிமெண்ட் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ‘தோழா’ ‘மகரிஷி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய முன்னணி தெலுங்கு இயக்குனர் வம்ஷி படைப்பள்ளி இயக்கவுள்ளார்.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ, பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தமன் இசையமைக்கும் இப்படத்தின் வில்லனாக நடிக்க பிரபல நடிகர் நானியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

ஏற்கனவே இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா, விஜய்க்கு மகளாக நடிக்கவுள்ளதாகவும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் முன்னணி நடிகர் பிரகாஷ் ராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. கில்லி படத்தில் விஜய் மற்றும் பிரகாஷ் ராஜ் இடையேயான காட்சிகள் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் இவர்கள் இணைவதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்று தெரிகிறது. கடைசியாக கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான ‘வில்லு’ படத்தில் விஜய்யுடன் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

