Vijay Antony 3.0: விஜய் ஆண்டனி இசைக் கச்சேரி ஒத்திவைப்பு.. என்ன காரணம் தெரியுமா?

vijay antony

தமிழ் சினிமாவில் இசை அமைப்பாளராக காலடி எடுத்து வைத்து, தற்போது நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், எடிட்டர் என பல்வேறு துறைகளில் காலடி எடுத்து வைத்துள்ளவர் விஜய் ஆண்டனி. ஆனாலும் விஜய் ஆண்டனிக்கு நடிகராக எந்த அளவுக்கு ரசிகர்கள் உள்ளார்கள் என்பதைக் காட்டிலும் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.  இன்றைக்கும் அவரது பாடல்களைக் கேட்டுவிட்டு நாட்களைத் தொடங்கும் தீவிரமான ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படியான நிலையில், இவர் தனது ரசிகர்களை குஷிப்படுத்த, அவ்வப்போது இசைக் கச்சேரிகளையும் நடத்தி வருகின்றார். கடந்த முறை இசைக் கச்சேரி நடத்தும்போது கூட, மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டதால், ரசிகர்களை குடையோடு இசைக் கச்சேரிக்கு வரச்சொன்னார். இவர் சென்னையில் , விஜய் ஆண்டனி 3.O என்ற பெயரில் இசைக் கச்சேரி நடத்த திட்டமிட்டார். அதற்கு சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடத்த ஒப்புதல் வாங்கி, காவல் துறையிடம் சமர்பித்து ஒப்புதல் பெற்றிருந்தார். டிசம்பர் 28ஆம் தேதி விஜய் ஆண்டனி 3.O இசைக் கச்சேரி நடைபெற இருந்தது. எனவே, விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு மூன்று நாட்களுக்கு முன்னரே 2025ஆம் ஆண்டினை வரவேற்கவுள்ளார்கள் என மகிழ்ச்சியில் இருந்தனர். இசைக் கச்சேரிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக, விஜய் ஆண்டனியே தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இப்படியான நிலையில், இன்று இசைக் கச்சேரியில் கலந்து கொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டு இருந்தனர். இப்படியான நிலையில், விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ள விஷயம் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. 


அதாவது, " வணக்கம் நண்பர்களே, சில எதிர்பாராத காரணங்களாலும், மற்றும் தற்போது சென்னையில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டும், அரசு அதிகாரிகள் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில், இன்று நடைபெறவிருந்த விஜய் ஆன்டனி 3.0 Live Concert, வேறு ஒரு தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. வருத்தம்: இதனால் உங்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மிகவும் வருத்தப்படுகிறேன். புதிய நிகழ்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் புரிதலுக்கு நன்றி. புதிய நிகழ்வு பிரம்மாண்டமாக இருக்கும். உங்கள் விஜய் ஆன்டனி" என பதிவிட்டுள்ளார். இவரது இந்தப் பதிவு விஜய் ஆண்டனி ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் கவலையும் ஏற்படுத்தியுள்ளது.  


மேலும் 'விஜய் ஆண்டனி - இன்னிசை கச்சேரி' நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரசிகர்களுக்கு தடையில்லா போக்குவரத்தை வழங்குவதற்கான ஏற்பாட்டையும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் ரத்து செய்துள்ளது. 
 

Share this story