"துப்பாக்கிய புடிங்க சிவா"... வெங்கட் பிரபு வசனத்தை மாற்றிய விஜய்!... காரணம் என்ன?
கோட்' படத்தில் விஜய், சிவகார்த்திகேயன் நடித்த காட்சி குறித்து அப்படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு மனம் திறந்து பேசியுள்ளார். ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான 'கோட்' (Greatest Of all time) ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூலை பெற்று சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் கோட் படத்தில் த்ரிஷா, சிவகார்த்திகேயன் ஆகியோர் பாடல் மற்றும் சில காட்சிகளிலும் தோன்றுகின்றனர். அதுவும் சிவகார்த்திகேயன் படத்தின் முக்கியமான காட்சியில் வருகிறார்.
அந்த காட்சியில் வில்லனை துப்பாக்கி முனையில் பார்த்து கொள்ளுமாறு சிவகார்த்திகேயனிடம் விட்டுவிட்டு விஜய் செல்வார். அப்போது விஜய், சிவகார்த்திகேயனிடம் "இந்தாங்க துப்பாக்கிய புடிங்க சிவா, உங்கள நம்பி ஆயிரக்கணக்கான பேர் இருக்காங்க" என கூறுவார். பின்னர் சிவா "நீங்க இதைவிட முக்கியமான வேலைக்கு செல்கிறீர்கள், நான் இங்கு பார்த்து கொள்கிறேன்" என கூறுவார்.
இது விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்வது போலவும், விஜய் இடத்தில் சினிமாவில் இனி சிவகார்த்திகேயன் இருப்பார் என்பது போலவும் மறைமுகமாக காட்சி படுத்தப்பட்டிருக்கும். இந்த காட்சி குறித்து தனியார் சேனலில் இயக்குநர் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.
அந்த காட்சி குறித்து அவர் பேசுகையில், "விஜய் இந்த காட்சியில் நடிக்க ஒப்பு கொண்டது மிகப்பெரிய விஷயம். நான் அந்த காட்சியில் “இதை வெச்சுக்கோங்க சிவா, யாராவது வந்தால் சுட்றுவேன் என சொல்லுங்க, ஆனா சுட்றாதிங்க” என விஜய்யிடம் கூற சொன்னேன். ஆனால் விஜய் தான், "இந்தாங்க துப்பாக்கிய புடிங்க சிவா, உங்கள நம்பி ஆயிரக்கணக்கான பேர் இருக்காங்க" என வசனத்தை மாற்றினார். ஆனால் அது தியேட்டரில் கிளாப்ஸ் அள்ளியது. அந்த வசனம் படத்திற்கும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் கூறுவது போல இருக்கும்" என கூறினார்.