சூர்யாவின் குரலில் வெளியானது விஜய் தேவரகொண்டா VD 12 டீசர் ...!

VD12

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்திற்கு ’கிங்டம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு டைட்டில் டீசர் மூலம் தெரிவித்துள்ளனர்.
 
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் விஜய் தேவரகொண்டா. தற்போது தன்னுடைய 12வது படத்தில் நடித்து முடித்துள்ளார். VD 12 என அழைக்கப்பட்டு வந்த அப்படத்தின் டைட்டில் இன்று டீசர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு 'கிங்டம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் டீசருக்கு தமிழில் சூர்யா, தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், ஹிந்தியில் ரன்பீர் கபூர் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர். vd

’ஜெர்ஸி’ படத்தின் இயக்குநர் கௌதம் தின்னனுரி கிங்டம் படத்தை இயக்குகிறார். ஜோமன் டி ஜான், கிரிஷ் கங்காதரன் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள டைட்டில் டீசர் முழுவதும் நடிகர் சூர்யாவின் குரல் பின்னணியில் ஒலிக்கிறது. கடற்கரையை ஒட்டிய கிராமத்தில் நடக்கும் வன்முறைகளையும் மக்களின் இறப்பையும் காட்சிப்படுத்தியிருக்கும் டீசரில் வசனங்கள் முழுக்க முழுக்க தமிழில் அமைந்துள்ளன. யுத்தம், வன்முறை குறித்து பேசும் இந்த வசனங்களை சூர்யாவின் குரலில் கேட்பதற்கு கம்பீரமான உணர்வை தருகிறது.


யுத்தம் யாருக்கானது என கேட்டு புதிய அரசன் பிறப்பான் என கூறுமிடத்தில் விஜய் தேவரகொண்டா தோன்றுகிறார். மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் உள்ளார் விஜய் தேவரகொண்டா. முழுக்க முழுக்க ஆக்ரோஷமான கதாபாத்திரமாக இந்த படத்தில் இருக்கிறார். டைட்டில் டீசரையும் அதன் தமிழ் வெர்சனுக்கு குரல் கொடுத்த சூர்யாவையும் கொண்டாடி வருகின்றனர்.

டீசரின் முடிவில் 'கிங்டம்' திரைப்படமானது இந்த வருடன் மே மாதம் 30ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். ஏற்கனவே மார்ச் 28ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த படம் தள்ளிப் போகிறது. ’ஜெர்ஸி’ படத்திற்கு பிறகு அனிருத் - இயக்குநர் கௌதன் தின்னனுரி இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
 
 

Share this story