“கடந்த காலமும் நிகழ் காலமும் இருப்பது போல் உள்ளது” - விஜய் சேதுபதி
சீனு ராமசாமி இயக்கத்தில் 8வது படமாக வெளியாகவுள்ள திரைப்படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. இப்படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்யா, ஐஸ்வர்யா தத்தா, பவா செல்லதுரை, மானஸி கொட்டாச்சி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருளானந்து - மேத்யூ அருளானந்து தயாரிக்கும் இப்படத்திற்கு என்.ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசுகையில், “இந்த மாதிரியான ஒரு மேடையில் 14 வருஷத்திற்கு முன்பு நிற்கும்போது ஏகன் அளவிற்கு எனக்கு தைரியம் இல்லை, மிகவும் நடுக்கத்தோடுதான் இருந்தேன். ஆனால் ஏகன் முகத்தில் நல்ல தைரியம் இருக்கிறது. ட்ரைலர் மற்றும் பாடல்களில் ஏகனை பார்க்கும்போது அவர் கொடுக்கும் முகபாவனை மிகவும் அழகாக இருந்தது. நம்ம ஊர் நிறத்தில் பார்ப்பதற்கு லட்சனமாக இருக்கிறார். அதேபோல் படத்தில் நடித்த அனைவருமே அழகாக இருக்கிறார்கள். கதையும் ரொம்ப அழகாக இருக்கிறது. சீனு ராமசாமியிடம் எனக்கு ரொம்ப பிடித்தது என்னவென்றால், தேனியில் அவர் எத்தனை படம் எடுத்தாலும் அவரால் ஒவ்வொரு முறையும் புதிதாக ஃபேரேம்(Frame) வைக்க முடியும். புதிதாக கதை சொல்ல முடியும். கதை சொல்லும்போது எங்கு ஃபேரேம் வைக்க வேண்டுமென ஒரு நாள் கூட யோசித்தோ தடுமாறியோ நான் பார்த்தது இல்லை. தன்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் பணம் செலவழித்தால் படத்தை முடிந்த அளவிற்கு சிக்கனமாக எடுத்து கதையை பார்வையாளர்களுக்கு புரியும் வகையில் எடுத்துவிடுவார்.
நான் பார்த்து வியந்த மிகச்சிறந்த இயக்குநர் சீனு ராமசாமி. எனக்கு அவர் வாய்ப்பு கொடுத்து இதுவரை நான்கு படங்களில் நடித்திருக்கிறேன். அந்த படங்களின் பட்ஜெட்டை விட சிக்கனமாகவும் சீக்கிரமாகவும் வேலை பார்த்து கொடுத்துவிட்டார். இவரை போன்ற இயக்குநரிடமிருந்து அறிமுகமாக ஏகன் கொடுத்து வைத்திருக்கவேண்டும், அதற்கு வாழ்த்துகள். தான் கற்றுக்கொண்டதை பகிர்வதில் சீனு ராமசாமிக்கு பெரிய இன்பம் இருக்கிறது. அதை ஏகனுக்கு கற்றுக்கொடுத்திருப்பார் என்று நம்புகிறேன். நான் இருந்த இடத்தில் இப்போது ஏகன் இருக்கிறார். இது எப்படி இருக்கிறது என்றால் கடந்த காலமும் நிகழ் காலமும் இருப்பதுபோல் உள்ளது. ஆனால் ஏகனின் எதிர்காலம் என்னைவிட நல்லா வரவேண்டும்” என்றார்.