“பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கோங்க சார்” - மேடையில் சீரியஸான விஜய் சேதுபதி
போஸ் வெங்கட் இயக்கத்தில் விமல் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சார்’. இப்படத்தில் கதாநாயகியாக சாயா தேவி நடித்திருக்க சிராஜ் , சரவணன், ரமா, ஜெயபாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.எஸ். பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சித்து குமார் இசையமைத்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தை வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி மூலம் வெளியிடுகிறார்.
இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் வெற்றிமாறன், விஜய் சேதுபதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். அப்போது விஜய் சேதுபதி பேசுகையில், “கூத்துப் பட்டறையில் இருக்கும் போது விமலின் நடிப்புக்கு நான் பெரிய ரசிகன். அவ்ளோ பிரமாதமாக நடிப்பார். கூத்துப் பட்டறையில் எல்லாரும் சிறந்த நடிகர்கள் தான். ஒரு சில நடிகர்களை எனக்கு ரொம்ப புடிக்கும். பாபு, சாந்தகுமார், குரு சோமசுந்தரம், முருகதாஸ், விதார்த் என அனைவரும் நடிக்கும் போது அவ்ளோ அழகாக இருக்கும். அதனால் சார் படம் விமலுக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக இருக்கும் என நம்புகிறேன்.
போஸ் வெங்கட், சீரியலில் நடிக்கும் போதிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். அடுத்தடுத்த கட்டத்திற்குத் தன்னை நகர்த்திக் கொண்டே இருக்கிறார். விடுதலை படப்பிடிப்பில் கூட அரசியல் புத்தகங்களைப் படித்துக் கொண்டு இருக்கிறார். அவருடைய அரசியல் எதிர்காலத்தையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன். இந்த படத்தில் வசனங்கள் எல்லாம் தெறிக்கிறது. ஒவ்வொரு வசனமும் நம்மளை யோசிக்க வைக்கிறது” என பேசிக்கொண்டிருந்த அவர், அருகில் அமர்ந்திருந்த நடிகர் சரவணனை பார்த்து, “நீங்க ரொம்ப நல்லா இருந்தீங்க சார்” என்று பாராட்டினார். உடனே சரவணன் விஜய் சேதுபதியின் காலை தொட்டு வணங்கினார். இதனால் சற்று தயக்கமடைந்த விஜய் சேதுபதி, “பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கோங்க சார்” என சிரித்துக் கொண்டே சற்று சீரியஸுடனும் சொன்னார். இது அங்கிருந்தவர்கள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. பின்பு அருகில் இருந்த சரவணன் மைக் முன்பு வந்து, “நான் சொல்லப் போவது இதுவரை வெளிவராத செய்தி. விஜய் சேதுபதியிடமும் டைரக்டரிடமும் அனுமதி வாங்கிவிட்டுத் தான் சொல்ல வேண்டும். ஆனாலும் நான் சொல்கிறேன், விஜய் சேதுபதிக்கு அப்பாவாக ஒரு படம் நடிக்க போகிறேன். அதனால்தான் விளையாட்டாக அவர் பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கோங்கன்னு சொன்னார்” என்றார்.