விஜய் சேதுபதி நடித்துள்ள மகாராஜா படத்தின் முதல் தோற்றம் வெளியீடு
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ஐம்பதாவது திரைப்படமாக உருவாகியுள்ள மகாராஜா திரைப்படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு வெளியான குரங்கு பொம்மை என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் நீதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மகாராஜா. இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரைப்படத்தில் பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக், பிரபல ஒளிப்பதிவாளர் நடராஜ், நடிகை மம்தா மோகன் உள்ளட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில், படத்தில் விஜய் சேதுபதியின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் முடி திருத்தும் தொழிலாளராக விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்றும், அவர் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் விஷயங்களே படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.