ஹீரோவான விஜய் டிவி ரக்‌ஷன்... ‘மறக்குமா நெஞ்சம்’ ஃப்ர்ஸ்ட் லுக் !

MarakkumaNenjam

விஜய் டிவி பிரபலம் ரக்‌ஷன் ஹீரோவாக நடித்துள்ள ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருப்பவர் விஜே ரக்‌ஷன். ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் அன்பை பெற்ற தற்போது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை சுவாரஸ்சியமாக தொகுத்து வழங்கி வருகிறார். சின்னத்திரையின் மூலம் கிடைத்த பிரபலத்தை அடுத்து சமீபத்தில்  சினிமாவிலும் கால்தடம் பதித்தார். 

முதல்முதலில் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான மலையாள நடிகர் துல்கர் சல்மானின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தன்னுடைய முதல் படத்திலேயே அனைவரின் பாராட்டையும் பெற்றார். இந்த படத்திற்கு பிறகு ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். 

MarakkumaNenjam

இந்த படத்தை ராக்கோ யோகேந்திரன் என்பவர் இயக்கியுள்ளார். 90-களில் நடக்கும் ஒரு ஃபீல் குட் ஸ்கூல் டிராமாவாக இந்த படம் உருவாகியுள்ளது. அதாவது பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கை சம்மந்தப்பட்ட படமாக இருக்கும். சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் லுக் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில் தற்போது இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கூடத்தில் ரக்‌ஷன் இருக்கும் புகைப்படம் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. 

இந்த படத்தில் ரக்‌ஷனுடன் இணைந்து தீனா, மலினா, ராகுல், ஸ்வேதா வேணுகோபால், ஆஷிகா காதர், மெல்வின் டென்னிஸ், துரோனா, நடாலி லூர்ட்ஸ், விஸ்வத் வாத்துல், முனிஷ்காந்த், அகிலா, அருண் குரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இந்த படத்தில் சச்சின்  வாரியர் இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார். ஃபிலியா எண்டர்டெயின்மென்ட் மற்றும் குவியம் மீடியா இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.  

 

 

Share this story