விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனின் படைத்தலைவன் ரிலீஸ் அப்டேட் வந்தாச்சு.. -

Padaithalaivan

இயக்குநர் அன்பு இயக்கத்தில், மறைந்த நடிகர் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி உள்ள படைத்தலைவன் படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.தமிழ் சினிமாவின் நடிகரும்‌, தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு காலமானார்.‌ இவரது மறைவு ஒட்டுமொத்த மக்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில், விஜயகாந்தின் 72வது பிறந்தநாளான இன்று (ஆக.25), தேமுதிக அலுவலகத்தில் தொண்டர்கள் கண்ணீருடன் விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் முதல் படமாக சகாப்தம் என்ற திரைப்படம் வெளியானது. பின்னர் மதுரை வீரன் என்ற படத்தில் நடித்தார். அதன்பின், விஜயகாந்துடன் தமிழன் என்று சொல் படத்தில் நடித்து வந்தார். ஆனால், அப்படம் தேர்தல், விஜயகாந்த் மறைவு ஆகிய காரணத்தால் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது 'படைத்தலைவன்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குநர் அன்பு இயக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். கடந்த ஆண்டு விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இந்நிலையில், இன்று விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தின் ரிலீஸ் பற்றிய அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் இந்தாண்டு செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

மேலும், படைத்தலைவன் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளதாக ஏற்கனவே வீடியோ‌ மூலம் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story