விஜய்யின் கடைசி படம் - ஸ்பெஷல் வீடியோ வெளியானது

Vijay

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தனது அரசியல் வருககைக்கு பிறகு இரண்டு படங்கள் நடிப்பதாக தெரிவித்திருந்தார். இதில் ஒரு படமான  தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்டைம் படம் கடந்த 5ஆம் தேதி வெளியானது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. விஜய்யின் 68வது படமாக வெளியாகியிருந்த இப்படம் முதல் நாளில் ரூ.126 கோடிக்கு மேல் வசூல் செய்த இப்படம் தற்போது ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனிடையில் விஜய்யின் கடைசி படமான அவரது 69வது படத்தை அ. வினோத் இயக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு த்ரிஷா, சமந்தா, மிருணாள் தாக்கூர், பாலிவுட் நடிகை ஆலியா பட், சமந்தா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகளிடம் படக்குழு பேச்சு வார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து ‘பிரேமலு’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மமிதா பைஜுவும் இப்படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. 


இந்நிலையில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். தயாரிப்பு நிறுவனம், இன்று(13.09.2024) காலை விஜய்யின் பழைய படங்களிலுள்ள அவரது அறிமுக சீன்களை எடிட் செய்து தங்களின் முதல் தமிழ் பட அறிவிப்பு வெளியாகும் என அறிவித்திருந்தது. இதையடுத்து விஜய்யின் 69வது படமாக இந்த அறிவிப்பு இருக்கலாம் என அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அந்த வீடியோவை பகிர்ந்து வந்தனர். 

இதை தொடர்ந்து விஜய்யின் 69வது படம் குறித்த ஸ்பெஷல் வீடியோ ஒன்றை கே.வி.என் தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், ஒன் லாஸ்ட் டைம் என்ற தலைப்பில் விஜய்யின் ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விஜய் படங்களில் வேலை செய்பவர்கள் என அனைவரும் விஜய் படங்கள் குறித்து தங்களது அனுபவங்களையும் விஜய்யின் கடைசி படம் குறித்தும் உருக்கமாக பேசியுள்ளனர். மேலும் விஜய் சினிமாவை விட்டு விலகுவது தங்களுக்கு வருத்தமளிப்பதாகவும் கூறியுள்ளனர். அதை தொடர்ந்து விஜய்யின் 69வது படம் குறித்த அறிவிப்பு நாளை(14.03.2024) மாலை 5 மணிக்கு வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Share this story