விஜய்யின் த.வெ.க. மாநாடு மிகப்பெரிய வெற்றி - ரஜினிகாந்த்
தமிழ்நாட்டில் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொது மக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகள் உண்டு, பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி நடிகர் ரஜினிகாந்த் வீட்டு வாசலில் ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். வீட்டு வாசலில் திரண்ட ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்.
உற்சாகமாக காணப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள். எல்லோரும் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருக்க வேண்டும்." நடிகர் விஜயின் மாநாடு பற்றிய கேள்விக்கு, "மாநாடு உண்மையில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்," என்று தெரிவித்தார்.