தங்கலான் 2 - விக்ரம் கொடுத்த அப்டேட்

Vikram

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் தங்கலான். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், டீஸர், ட்ரைலர் ஆகியவை கவனம் பெற்றதையடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் கடந்த சுதந்திர தினத்தன்று (15.08.2024) உலகம் முழுவதும் வெளியானது. மேலும் இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வருகிற 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.    

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று முதல் நாளில் மட்டும் ரூ. 26 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டது. இதையடுத்து ஹைதராபாத்தில் படக்குழு சார்பில் நன்றி தெரிவிப்பு விழா நடைபெற்றது. அதில் விக்ரம், பா,ரஞ்சித், ஞானவேல் ராஜா, மாளவிகா மோகனன், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  

அப்போது விக்ரம் பேசுகையில், “இப்படத்தை தெலுங்கில் விநியோகம் செய்த மைத்திரி புரொடக்‌ஷனுக்கு நன்றி. தெலுங்கில் வரவேற்பை பெற்று, மேலும் அதிக தியேட்டரில் திரையிடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படிப்பட்ட நல்ல படத்திலும், நல்ல கதாபாத்திரத்திலும் நடிக்க வாய்ப்பை உருவாக்கி கொடுத்த பா.ரஞ்சித்துக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் தங்கலான் படம் மிகவும் பிடித்துள்ளதால், இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகும். நீங்கள் இப்படத்திற்கு கொடுக்கும் அன்பை பார்க்கும்போது தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் தொடரலாம்” என்றார். இதன் மூலம் தங்கலான் படத்தின் இரண்டாம் பாகம்  உருவாகவுள்ளதாகத் தெரியும் சூழலில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

Share this story