நெட்ஃபிளிக்ஸ்-ல் வெளியானது விக்ரமின் 'தங்கலான் '!

vikram

பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடித்த தங்கலான் திரைப்படம் இன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. 

’தங்கலான்’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்த ‘தங்கலான்’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்த இப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியான தங்கலான் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

தங்கலான் திரைப்படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோரின் கதாபாத்திரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. தங்கலான் திரைப்படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. அரண்மனை 4, ராயன், மகாராஜா போன்ற சில திரைப்படங்கள் மட்டுமே இந்த வருடம் 100 கோடி வசூலைப் பெற்ற நிலையில், தங்கலான் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்தது விக்ரம் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.



இந்நிலையில் தங்கலான் திரைப்படம் பல மாதங்கள் ஓடிடி வெளியீடு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இந்நிலையில் இன்று (டிச.10) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. திடீரென்று எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் தங்கலான் திரைப்படம் ஓடிடியில் வெளியானது விக்ரம் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது மட்டுமின்றி நேற்று அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ’வீர தீர சூரன்’ படத்தின் டீசர் வெளியானது. நடிகர் விக்ரம் நீண்ட நாட்களுக்கு பின் ஆக்‌ஷன் படத்தில் நடித்துள்ள நிலையில், அப்படம் வரும் ஜனவரி மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share this story