விக்ரமின் ‘வீர தீர சூரன்’ டீசர் டிச.9-ல் ரிலீஸ்!
விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ படத்தின் டீசர் வரும் திங்கட்கிழமை (டிச.9) வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.‘சித்தா’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அருண்குமாரும், ‘தங்கலான்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரமும் இணைந்துள்ள திரைப்படம் ‘வீர தீர சூரன்’. இந்தப் படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, மலையாள நடிகர் சூரஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷிபு தமீன்ஸ் தயாரித்து வரும் இதன் படப்பிடிப்பு மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. விரைவில் படப்பிடிப்பினை முழுமையாக முடிக்க, படக்குழு மும்முரமாக பணிபுரிந்து வருகிறது. இரண்டு பாகமாக வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ஃபைவ் ஸ்டார் செந்தில் பெரும் விலைக் கொடுத்து வாங்கியிருக்கிறார். இவர் தான் ‘கருடன்’, ‘மகாராஜா’ உள்ளிட்ட பல படங்களை தமிழ்நாட்டில் விநியோகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு உரிமையினை ஃபார்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் வரும் டிசம்பர் 9-ம் தேதி டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.