‘உங்களை மாத்த இல்லை... உங்க சந்ததியை....’ - மீண்டும் வாத்தியாராக விமல்

SIR

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்த போஸ் வெங்கட், ‘கன்னி மாடம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இப்படத்தையடுத்து ‘சார்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளார். அதில் விமல் கதாநாயகனாக நடித்திருக்க அவருக்கு ஜோடியாக சாயா தேவி நடித்துள்ளார். மேலும் சிராஜ் , சரவணன், ரமா, ஜெயபாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.எஸ். பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை வெற்றி மாறன் வழங்க சித்து குமார் இசையமைத்துள்ளார். 

இப்படத்திலிருந்து இதுவரை ‘பனங்கருக்கா...’, ‘பூ வாசனை...’, ‘படிச்சிக்கிறோம்...’ உள்ளிட்ட பாடல்கள் வெளியாகியிருந்தது. இதனிடையே இப்படத்தின் டீசர் கடந்த ஜூன் மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ட்ரைலர், சார் என்ற டைட்டிலுக்கு ஏற்றவாறு ஆசிரியன் என்ற சொல்லுக்கு விளக்கம் கொடுத்து தொடங்குகிறது. அதன் பிறகு ஒரு பள்ளியில் ஞானம் என்ற கதாபாத்திரத்தில் வாத்தியாராக வரும் விமலுக்கும் அதே பள்ளியில் ஆசிரியையாக இருக்கும் சாயா தேவிக்கும் இடையேயான காதல் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதையடுத்து ‘மனு நீதிய ஒழிக்க சொன்னா... மக்கள் நீதி கேட்டு கொடுக்கிற மனுவை ஒழிக்குறானுக’ என்ற வசனம் பின்னணி குரலாக ஒலிக்க சில ஆக்‌ஷன் காட்சிகளுடன் விறுவிறுப்பாக ட்ரைலர் நகர்கிறது. 

இறுதியில் ‘நான் சொல்லி கொடுக்கனும்னு தைரியமா இங்க வந்து நிக்கிறது உங்கள மாத்த இல்ல உங்க சந்ததிய மாத்த’ என்ற வசனம் இடம்பெற கையில் வேல் கம்புடன் விமல் நடந்து வருவதுபோல் காட்சிகள் அமைந்துள்ளது. மேலும் இப்படம் விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு விமல் ‘வாகை சூட வா’ என்ற படத்தில் ஆசிரியராக நடித்திருந்தார். இப்படம் சிறந்த படத்திற்கான தேசிய விருதை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Share this story