விஷால் பெரிய ஆள் இல்லை - நீதிபதி காட்டம்

விஷால் பெரிய ஆள் இல்லை - நீதிபதி காட்டம்

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டப் பலர் நடிப்பில் வரும் செப்.15ம் தேதி ‘மார்க் ஆண்டனி’ திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்தப் படத்தை வெளியிட தடை விதித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தாதது தொடர்பாக நடிகர் விஷால், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

விஷால் பெரிய ஆள் இல்லை - நீதிபதி காட்டம்

அந்த தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, 'வீரமே வாகை சூடும்' படத்தை வெளியிடுவதாக அறிவித்திருந்த விஷால் நிறுவனத்திற்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமர்வு,  தொகையை செலுத்தாவிட்டால் தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீர்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தாமல் இருந்தது, சொத்து விவரங்களை தாக்கல் செய்யாதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க விஷாலுக்கு உத்தரவிட்டது. மேலும், வங்கிக் கணக்குகளின் கணக்கு விவரங்களையும், விஷாலுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்களையும், தாக்கல் செய்ய  நீதிபதி ஆஷா உத்தரவிட்டார்.  இந்நிலையில், இந்த வழக்கில் இன்று ஆஜராக இருந்த விஷால், சொத்து விவரங்களை தாக்கல் செய்யவிில்லை. மேலும், வங்கியில் இருந்து சொத்து விவரங்களை பெற தாமதம் ஆகிவிட்டது என்றும், 6 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர் தரப்பில் கூறப்பட்டது. மேலும், தன் வீடு அடமானத்தில் இருப்பதாவும் குறிப்பிடப்பட்டது.

விஷால் பெரிய ஆள் இல்லை - நீதிபதி காட்டம்

இதைக் கேட்ட நீதிபதி ஆஷா, நீதிமன்றத்தை விட பெரிய ஆள் என விஷால் எண்ண வேண்டாம் எனவும், உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சொத்து விவரங்கள் தாக்கல் செய்ய அவகாசம் அளித்தும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Share this story