மதகஜராஜா ரிலீஸ் குறித்து விஷால் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு
சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் உருவாகி 10 ஆண்டுகளுக்கு மேல் வெளியாகாமல் கிடப்பில் இருந்த படம் ‘மதகஜராஜா’. இப்படத்தில் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி ஆகியோர்களுடன் மறைந்த நடிகர்களான மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜெமினி பிலிம் சர்க்யூட் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இவரது இசையில் விஷால், ‘மை டியர் லவ்வரு..’ பாடலை பாடியிருந்தார். இப்பாடலின் லிரிக் வீடியோ அப்போது வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.
இப்படம் 2015ஆம் ஆண்டின் பொங்கலுக்கு வெளியிடுவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஜெமினி பிலிம் சர்க்யூட், இப்படத்துக்கு முன்பு தயாரித்திருந்த படங்களை விநியோகம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. பின்பு கடந்த ஆண்டு சிக்கல் முடிவுக்கு வந்ததாகவும் ரிலீஸூக்கு படம் தயாராகி வருவதாகவும் பேச்சுகள் எழுந்தது. ஆனால் நேற்று(03.01.2025) திடீரென இப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 12 வருடம் கழித்து இப்படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் ஒரு வித எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
After 12 long years, one of my career favourite family entertainer #MadhaGajaRaja with my fav. #SundarC & @iamsanthanam combo is all set to release this #Pongal to create a laughter riot among the audience.
— Vishal (@VishalKOfficial) January 3, 2025
A @vijayantony musical.#GeminiFilmCircuit.
Worldwide release on #Jan12.… pic.twitter.com/r2pvZyOa7S
இந்த நிலையில் இப்படம் குறித்து விஷால், தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “12 வருடம் கழித்து என்னுடைய ஃபேவரட் ஃபேமிலி எண்டர்டெயினர் படங்களில் ஒன்றான மதகஜராஜா வெளியாகவிருக்கிறது. அதுவும் என்னுடைய ஃபேவரட் சுந்தர்.சி மற்றும் சந்தானம் காம்போவுடன் வருகிறது. இந்த பொங்கலுக்கு நிச்சயம் ஆடியன்ஸை இப்படம் சிரிப்பலையில் மூழ்கடிக்க செய்யும்” என குறிப்பிட்டுள்ளார். இதே விஷால் - சுந்தர்.சி கூட்டணியில் இதற்கு முன்பு ஆம்பள மற்றும் ஆக்ஷன் திரைப்படம் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.