விஷாலின் அடுத்தடுத்த படங்கள் குறித்து அவரே கொடுத்த அப்டேட்...!

vishal

நடிகர் விஷால் 'மதகஜராஜா' திரைப்பட வெற்றி விழாவில் தான் அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் படங்களைக் குறித்து கூறியுள்ளார். பல வருடங்கள் கழித்து வெளியான 'மதகஜராஜா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் கூட்டணியில் வெளியான மதகஜரஜா திரைப்படம் ஐந்து நாட்கள் முடிவில் 25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2013-ஆம் ஆண்டு உருவான திரைப்படம் 'மதகஜராஜா'. இப்படத்தில் விஷாலுடன் சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, நிதின் சத்யா, சோனுசூட், முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மனோபாலா, மயில்சாமி, சிட்டிபாபு என பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார்.vishal

பல்வேறு பிரச்னைகளால் பல ஆண்டுகளாக ரிலீஸ் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்த 'மதகஜராஜா', ஜனவரி 12ஆம் தேதி வெளியானது. 12 வருடங்கள் முன்னால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்பதால் இப்போது வெளிவரும் புதிய படங்களுடன் எப்படி போட்டியிட இருக்கிறது என சந்தேகமும் இருந்து வந்தது.ஆனால் யாருமே எதிர்பாராத விதமாக இப்படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. மக்கள் அனைவரும் கொண்டாடத்தக்க பொழுதுபோக்கு சினிமாவாக உள்ளது என பலராலும் பாராட்டப்பட்டது. தமிழகம் முழுவதும் பல திரையரங்குகளில் பொங்கல் பண்டிகை தினங்களில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளானது. 2025ஆம் ஆண்டு முதல் வெற்றிப் படமாக மாறியுள்ளது ’மதகஜராஜா’

vishal
இந்த வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழாவை படக்குழுவினர் சென்னையில் ஒருங்கிணைத்தனர். அதில் சுந்தர் சி, அஞ்சலி, விஜய் ஆண்டனி, விஷால் என படக்குழுவினர் அனைவரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பேசினர்.மேடையில் பேசிய விஷால் தான் அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் படங்களை குறித்து தெரிவித்தார். கௌதம் மேனன் திரைப்படத்தில் விஷால் நடிக்க உள்ளார் என பல மாதங்களாக செய்தி வெளியாகி வந்தன. அதை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். தற்போது கௌதம் மேனன் மலையாளத்தில் மம்முட்டியை வைத்து 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' எனும் படத்தை இயக்கியுள்ளார்.

 
அது மட்டும் இல்லாமல் ’டிமான்டி காலனி’, ’இமைக்கா நொடிகள்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளதைப் பற்றியும் முதன்முறையாக அறிவித்திருக்கிறார். மேலும் விஷாலே இயக்கி நடிப்பதாக அறிவிக்கப்பட்ட ’துப்பறிவாளன் 2’ படத்தின் பணிகளும் நடைபெறும் என கூறியுள்ளார். மீண்டும் சுந்தர் சியுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன் எனவும் தெரிவித்தார்.மேலும் சுந்தர்.சி - விஷால் கூட்டணியில் 2015 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான ’ஆம்பள’ திரைப்படத்தை மறு வெளியீடு செய்வது குறித்து பரிசளித்து வருவதாகவும் விஷால் கூறினார். ’ஆம்பள’ திரைப்படம் வெளியாகி பத்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கடந்த புதன்கிழமை அந்த படத்தின் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி அதனை நினைவுகூறும் விதமாக பத்து வருடங்களுக்கு முன்பு சுந்தர் சி, விஷாலுடன் இணைந்து எடுத்த ஒளிப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
 

Share this story