இழிவான நடன அசைவுகள்...தெலங்கானா மகளிர் ஆணையம் எச்சரிக்கை...!

தெலுங்கு சினிமாவில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இழிவான நடன அசைவுகள் வைக்கப்படுவதாக தெலங்கானா மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தெலுங்கு திரைப்படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பாடல் வரிகள், நடன அசைவுகள் மற்றும் வசனங்கள் அதிகம் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. பால கிருஷ்ணா, ஊர்வசி ரவுதெலா நடித்து சமீபத்தில் வெளியான ‘டாக்கு மகாராஜ்’, ரவிதேஜா, பாக்யஸ்ரீ போர்சே நடித்த ‘மிஸ்டர் பச்சன்’, விரைவில் வெளியாகும். ‘ராபின் ஹூட்’ உட்பட சில படங்களின் பாடல்களில் நடன அசைவுகள் விமர்சிக்கப்பட்டன. இது தொடர்பாக தெலங்கானா மகளிர் ஆணையத்துக்கும் புகார்கள் சென்றன.
இதையடுத்து மகளிர் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சில பாடல்களில் பயன்படுத்தப்படும் நடன அசைவுகள் ஆபாசமாகவும், பெண்களை இழிவுபடுத்துவதாகவும் இருப்பதாகப் புகார்கள் வந்துள்ளன. சினிமா, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சக்திவாய்ந்த ஊடகம் என்பதால், பெண்களை இழிவுபடுத்துவது கவலைக்குரியதாக இருக்கிறது. இவ்விஷயத்தில் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடன இயக்குநர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இந்த எச்சரிக்கையை பின்பற்றாவிட்டால், கடும் நடவடிக்கை எடுப்போம். சமூகத்துக்கு நேர்மறையான செய்திகளை வழங்குவதற்கும் பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்கும் திரைப்படத் துறைக்குத் தார்மீக பொறுப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளது.