“நட்புக்காக உயிரையே கொடுப்போம் அடி வாங்க மாட்டோமா என்ன?” சசிகுமார் பேச்சு!
இரா சரவணன் தமிழில் கத்துக்குட்டி, உடன்பிறப்பே ஆகிய படங்களை இயக்கியவர். இவர் தற்போது சசிகுமார் நடித்துள்ள 'நந்தன்' என்ற படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இப்படத்தில் ஸ்ருதி, பாலாஜி சக்திவேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
வருகிற 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று (செப்.13) சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சசிகுமார், இயக்குனர் இரா சரவணன் உள்ளிட்ட படக்குழுவினர் உடன் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குனர் எச்.வினோத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து பேசிய சசிகுமார், “சீமான் படம் பார்த்து வாழ்த்திய வார்த்தைகளை எப்போதும் மறக்க மாட்டோம். எச்.வினோத் அவருடைய படத்தின் புரோமோஷனுக்கே வர மாட்டார். அப்படி இருக்கையில் படத்தை பார்த்துவிட்டு வாழ்த்தி உள்ளார்.
சரவணனின் நேர்மை எனக்கு பிடித்திருந்தது. சினிமாவில் யார் உங்களுடன் இருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. இந்த படத்தில் நான் வாங்கிய அடிகள் எல்லாம் விருதுகளாக மாறி விடும். நான் இந்தப் படத்தை தயாரிக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்த கதையை உள்வாங்கி நடித்தேன். நட்புக்காக உயிரையே கொடுப்போம் அடி வாங்க மாட்டோமா என்ன? சரவணனின் எழுத்துக்கள் பயங்கரமாக இருக்கும். இந்த படம் பாடம் இல்லை, பதிவு. என்னுடைய நடையை மாற்ற வேண்டும் என்று நினைப்பேன், ஆனால் ஜிப்ரான் என்னுடைய நடைக்கு ஒரு பிஜிஎம் போட்டு உள்ளார். அட்டகாசமாக வந்திருக்கிறது" என கூறியுள்ளார்.