நாளை என்னென்ன படங்கள் வெளியாகிறது? அப்டேட் இதோ..
வெற்றிமாறனின் விடுதலை-2, ஹாலிவுட் திரைப்படமான முஃபாசா உள்ளிட்ட படங்கள் நாளை திரைக்கு வருகிறது வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான திரைப்படம் விடுதலை. கதை நாயகனாக சூரி நடித்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இளையராஜா இசையில் பாடல்கள் வரவேற்பும் பெற்றது. இதனையடுத்து விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதியின் காட்சிகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. வாத்தியார் என்ற வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்த வசனங்கள் பேசுபொருளானது.
இந்த நிலையில் இப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்திலும் இளையராஜா இசையில் உருவான தெனம்தெனமும் உன் நெனப்பு என்ற பாட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதல் பாகத்தின் வெற்றியால் இந்த இரண்டாம் பாகத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச திரைப்பட விழாக்களிலும் விடுதலை முதல் மற்றும் இரண்டாவது பாகம் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் ஆக்ஷன் பிளாக்பஸ்டர் திரைப்படமான தி லயன் கிங் வெற்றியைத் தொடர்ந்து முஃபாசா- தி லயன் கிங் உருவாகியுள்ளது. இந்தியாவிலும் இப்படத்திற்கு அதிக ரசிகர்கள் உள்ள நிலையில் இங்கும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு நடிகர்கள் அர்ஜுன் தாஸ், டாக்காவுக்கு அசோக் செல்வன், ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் டிமோன், ரஃபிக்கியின் இளைய பதிப்பிற்கு நடிகர் விடிவி கணேஷ் மற்றும் கிரோஸின் குரலாக நடிகர் நாசர் ஆகியோர் குரல் கொடுத்திருக்கின்றனர்.
இதுமட்டுமின்றி கன்னட நடிகர் உபேந்திராவின் யு.ஐ, மலையாள படமான மார்கோ ஆகியவையும் தமிழ் டப்பிங் செய்யப்பட்டு நாளை வெளியாகிறது.